வார இறுதியில் குடும்பத்தோடு சென்று பார்க்கும் வகையில் தமிழில் இந்த வாரம் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. நேரடி தமிழ் திரைப்படங்கள், மலையாளம், இந்தி மற்றும் ஹாலிவுட் என மொத்தம் 5 திரைப்படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.


ஆதிபுருஷ்:


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணம் கதையை மையமாக கொண்டு பெரும் பொருட்செலவில் 3டியில் இப்படம் இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தில், கிரித்தி சனோன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் முறையே சீதை மற்றும் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சன்சித் மற்றும் அன்கித் பல்ஹாரா சகோதரர்கள் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.


பொம்மை:


ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் படங்களை இயக்கக் கூடிய இயக்குனர் ராதாமோகன். அவரது இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை. ஒரு பொம்மையின் மீது கொண்ட காதல் ஒரு மனிதனை என்னவெல்ல செய்ய வைக்கிறது என்பதன் அடிப்படையில், ஒரு சைக்கி த்ரில்லர் படமாக பொம்மை உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


எறும்பு:


குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம், ‘எறும்பு’. படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார் சுரேஷ் குணசேகரன். ஒரு கிராம் மோதிரம் தொலைந்து விட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். இதுதான் கதை. 


சார்லஸ் எண்டர்பிரைசஸ்:


சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ். ஊர்வசி, பாலு வர்கீஷ், கலையரசன் மற்றும் குருசோமசுந்தரம்  ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கணவரை பிரிந்து தனியே வந்த கோமதி ( ஊர்வசி ) தனது மகனுடன் தனியாக வாழ்ந்துவருகிறார். அவரது மகனுக்கு கண்ணில் ஒரு பிரச்சனை இருக்கிறது.


அந்த சூழலில் கோமதி வீட்டில் இருக்கும் விநாயகர் சிலையை பர்வதம் என்ற பெண் பணத்திற்கு கேட்கிறார் , எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக சொல்கிறார், ஆனால் கோமதிக்கு இந்த விநாயகர் சிலையை வைத்து ஒரு கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கடைசியில் ரவி விநாயகர் சிலையை விற்று கண் பிரச்சனையை தீர்த்தரா ? இல்லையா ? அல்லது கோமதி அந்த சிலையை வைத்து கோவில் கட்டினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை


தி ஃபிளாஷ்:


ஆண்டி முஷெட்டி இயக்கத்தில் எஸ்ரா மில்லர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி ஃப்ளாஷ். டைம் டிராவல் மூலம் கடந்த காலத்திற்கு சென்று தனது தாயை நாயகன் பாரி ஆலன் காப்பாற்ற, அதனால் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் மீதிக்கதை. டிசி யுனிவர்சிற்கான புதிய திறவுகோலாகா தி ஃபிளாஷ் திரைப்படம் அமைந்துள்ளது.