தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பசங்க படத்தில் நடித்ததற்காக நடிகர் கிஷோருக்கு விருது வழங்கப்பட்டதை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். 


தமிழ் சினிமாவின் மறுபக்கங்களாக இருந்த திரைக்கலைஞர்களே பின்னாளில் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் அமர்ந்தனர். இதனால் தமிழ் சினிமாவும் ஆட்சியாளர்களும் பிரிக்க முடியாத உறவை இன்றளவும் கொண்டுள்ளனர். ஆரம்பகாலத்தில் சினிமா கலைஞர்களுக்கும், தொலைக்காட்சி வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கும் தமிழ்நாடு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த விருதுகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை.


கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கியது. அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளுக்கும் அதன் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை.


அதிமுகவின் இறுதிகாலக்கட்டத்தில்  கலைமாமணி விருதுகள் மட்டும் வழங்கப்பட்டது. அதன்பின் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறமலேயே இருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் முடிவுற்ற நிலையில் தமிழ்நாடு அரசு அந்த விழாவை நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடத்தி விருதுகள் வழங்கி கலைஞர்களை விருது வழங்கி கௌரவப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,  மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா பாபு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். 






இதற்கிடையில் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் பட்டியலில் சிறந்த படமாக பசங்க படமும், சிறந்த உரையாடல் ஆசிரியராக பாண்டிராஜூம், சிறந்த பாடலாசிரியாக யுகபாரதி, சிறந்த பின்னணி பாடகராக மறைந்த பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, குழந்தை நட்சத்திரங்களாக கிஷோர், ஸ்ரீராம் என 6 விருதுகளை பசங்க படம் வென்றது. இதனையடுத்து குழந்தை நட்சத்திரமாக அறிவிக்கப்பட்ட கிஷோர் மேடையேறிய போது அனைவரும் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இவ்வளவு பெரிய பையனுக்கு குழந்தை நட்சத்திரம் விருதா...நீங்க லேட் பண்ணலாம். ஆனால் இவ்வளவு லேட் பண்ணக்கூடாது என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.