சாதி அரசியல் பேசும் படங்கள் பற்றி கெளதம் மேனன்
சில மாதங்கள் முன்பாக இயக்குநர் கெளதம் மேனன் பேசிய கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக விவாதப் பொருளானது . சாதிய பாகுபாடுகளைப் பற்றி பேசும் படங்கள் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றும் இன்றைய சூழலில் இந்த கதைகளை படமாக எடுக்க வேண்டிய தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார் . தற்போது நெல்லையில் கவின் குமார் ஆணவப்படுகொலையைத் தொடர்ந்து கெளதம் மேனனின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது . கெளதம் மேனனின் கருத்திற்கு எதிர்வினையாற்றி பலர் பதிவிட்டு வருகிறார்
இல்லாத சாதியை வைத்து படம் பண்றாங்க
" நான் படங்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை ஆனால் சாதிய பாகுபாடுகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மாதிரியான கதைகள் இன்றைய சூழலில் பேசவேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் இந்த கதைகளை நாம் 80 களில் 90 களில் நடந்ததாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதே கதையை இன்றைய சூழலில் பொருத்தி நம்மால் சொல்ல முடியாது ஏனால் யாருக்கும் அந்த படங்களைப் பார்ப்பதில் விருப்பமில்லை " என அவர் இந்த நேர்காணலில் பேசியிருந்தார்.
ஐடியில் வேலை பார்த்த கவின் குமார் மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரே காரணத்தினால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதேபோல அண்மையில் நடந்த இன்னும் பல நிகழ்வுகளை சுட்டிகாட்டலாம். இப்படியான நிலையில் சமூக எதார்த்தத்தைப் பற்றிய துளிப் புரிதல் கூட இல்லாமல் கெளதம் மேனன் போன்ற திரைபிரபலங்கள், இன்றைய சூழலில் சாதி இல்லை , சாதி சான்றிதழ்களை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் போன்ற தட்டையான கருத்துகளை தன்னம்பிக்கையோடு மேடையில் பேசிவருகிறார்கள். இந்த கருத்து இவரைப் பொன்றவர்கள் சமூக அமைப்பில் அவர்கள் அனுபவிக்கும் செளகரியங்களையும் அவர்களின் சாதிய மேட்டிமையையுமே நமக்கு அடையாளம் காட்டுகின்றன.