மாமன்னன் படத்தை பார்த்து படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், அந்த சம்பவம் இணையவாசிகள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
மாமன்னன் படம்
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடைசிப் படம் என்ற தகவலோடு ‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
மேலும் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். படத்தின் வசனங்கள், காட்சிகள், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பு என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும் திரையுலகினரும் மாமன்னன் படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ரஜினிகாந்த் பாராட்டு
அந்த ட்வீட்டில், ’சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்’ என தெரிவித்திருந்தார். இதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ், ‘என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.
மேலும் உதயநிதியும், சமத்துவம் போற்றும் #மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்சார் அவர்களுக்கு #மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும் என தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் ரஜினிகாந்த் ட்வீட்டிற்கு கீழே பலரும், “ஏன் மாமன்னன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பெயரை பதிவிடவில்லை?” என கேள்வியெழுப்பியுள்ளனர்.
தங்கத்தை மறந்த காளையன்
கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் வெளியானது. இந்த படத்தில் காளையன் கேரக்டரில் ரஜினிகாந்தும், அவரின் தங்கையாக ‘தங்க மீனாட்சி’ கேரக்டரில் கீர்த்தி சுரேஷூம் நடித்திருந்தனர். ரஜினியின் தங்கை கேரக்டர் என்பதால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கூட கீர்த்தி சுரேஷ் மறுத்திருந்தார். அப்படியான கீர்த்தியை ஏன் ரஜினி பாராட்ட மறந்தார் என்பதே பலருக்கும் கேள்வியாக உள்ளது.