முகேஷ் அம்பானி இல்ல திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் பணிப்பெண்ணை அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின்  திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.  முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. 


இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 12ம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடக்கவுள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வரும் நிலையில் 3 நாட்கள் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. ரூ.1000 கோடி செலவில் நடைபெற்ற இந்த கொண்டாட்டங்கள் பற்றி தான் ஒட்டுமொத்த இந்தியாவே பேசிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 29 ஆம் தேதி கிட்டதட்ட குஜராத் மாநிலம் ஜாம் நகரின் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பத்தினர் விருந்தளித்து அசத்தினர். 






இந்த கொண்டாட்டத்தில் உலக அளவிலான பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை வட்டாரங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றார். அவருடன் மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் வந்திருந்தனர். அம்பானி வீட்டு நிகழ்ச்சிக்கு ரஜினி வருகை தந்த வீடியோக்கள் வைரலான நேரத்தில், சர்ச்சையையும் கிளப்பியது. அதில் ரஜினி தன் குடும்பத்தினருடன் வந்த பணிப்பெண்ணை அங்கிருந்து தள்ளிப் போகுமாறு கையால் சைகை செய்தார். உடனே பின்னால் வந்த காவல்துறை அதிகாரிகள் அப்பெண்ணை அங்கிருந்து நகரச் செய்த காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. 


இதற்கு இணையவாசிகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் உண்மையில் ரஜினியிடம் புகைப்படக்காரர்கள் குடும்ப புகைப்படம் எடுக்க கேட்டுக் கொண்டதால் தான் அவர் உடன் வந்த பணிப்பெண்ணை நகரச் சொல்லியதாக ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வீடியோவை பார்த்தால் கூட்டத்தினரோடு தான் அப்பெண்ணையும் அழைத்து வந்திருப்பதையும் காணலாம். இப்படி ரஜினியை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்புபவர்கள் தான் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.