பணம் கேட்கும் ரிவியுவர்ஸ்
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி சினிமா விமர்சகர்களைப் பற்றிய பரவலான விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. படங்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வழங்க ரிவியுவர்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களிடம் பணம் வாங்குவதாக இந்த நிகழ்ச்சியில் விமர்சகர் ஒருவர் தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து யூடியூபில் விமர்சனம் வெளியிட்டு வரும் இட்ஸ் பிரசாந்த் உள்ளிட்டவர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் தயாரிப்பாளர் தனஞ்சயன் அளித்த நேர்காணல் ஒன்றில் பிரபல விமர்சகர் ஒருவர் சின்ன படங்களுக்கு விமர்சனம் செய்ய 15 முதல் 20 ஆயிரம் வரை பணம் கேட்பதாக தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ப்ளூ சட்டை மாறன் ஒருவர் மட்டுமே பணம் வாங்காமல் விமர்சனங்கள் வெளியிட்டு வருகிறார் என்றும் கூறியுள்ளார்
அன்று ஊரே திட்டிய ப்ளூ சட்டை மாறன்
2012 ஆம் ஆண்டு முதல் யூடியூபில் திரைப்பட விமர்சனங்கள் வெளியிட்டு வருபவர் ப்ளூ சட்டை மாறன். எல்லா படங்களுக்கும் நீல கலர் சட்டை அணிந்து விமர்சனம் செய்வதால் ரசிகர்களிடையே ப்ளூ சட்டை மாறன் என பரவலாக அறியப்படுகிறார். ஆரம்ப கட்டத்தில் திரைப்படங்களை விமர்சனம் செய்தபோது தனக்கு பிடிக்காத படங்களை மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வந்தார். இதனால் நெட்டிசன்கள் இவரை கடுமையாக தாக்கி வந்தார்கள். எதிர்ப்புகள் அதிகரித்தபின் தனது விமர்சனத்தை மேலும் பக்குவப்படுத்திக் கொண்டார்
ஊரே கொண்டாடும் ரிவியுவர்
இன்று ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்துவிட்டு தான் பெரும்பாலானவர்கள் ஒரு படத்திற்கு செல்லலாமா வேண்டாமா என்கிற முடிவையே எடுக்கிறார்கள். நன்றாக இருக்கும் படங்களுக்கு பாராட்டுக்களையும் சுமாரான படங்களுக்கு தனது நகைச்சுவை பாணியிலும் விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன். எந்த படத்தின் விமர்சனத்திற்கும் பணம் வாங்குவதில்லை என தயாரிப்பாளர் தனஞ்சயன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.