ஜனவரி 23ம் தேதி திரௌபதி 2 படம் ரிலீசாவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தெறி படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் திரௌபதி 2 இயக்குநர் மோகன் ஜி ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக இணையவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திரௌபதி 2 ரிலீஸ்
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் அடுத்ததாக திரௌபதி 2 படம் உருவாகியுள்ளது. வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். ரக்ஷனா இந்து சூடன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகர் நட்டி, நாடோடிகள் பரணி, வேலராமமூர்த்தி போன்றதும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள திரௌபதி 2 படம் முதலில் ஜனவரி 23ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் பொங்கல் பண்டிகை வெளியிட்டிருந்து நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் பின்வாங்கியதால் திரௌபதி 2 படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தடாலடியாக அறிவிப்பு வெளியாகி அப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. ஆனால் திரையரங்கு தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டதால் இப்படம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
ரீ-ரிலீஸாகும் படங்கள்
இப்படியான நிலையில் அதே ஜனவரி 23ஆம் தேதி நடிகர் அஜித் நடிப்பில் அவரின் 50வது படமாக வெளியான மங்காத்தாவும், விஜய் நடிப்பில் உருவான தெறி படமும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாத நிலையில் விஜய் ரசிகர்களை சமாதானம் செய்ய தெறி படம் ஜனவரி 15ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் விஜய் படம் ரிலீஸ் ஆகாததால் வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய இரண்டு படங்களும் வெளியானது. இதனால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் ரீ-ரிலீஸை தள்ளி வைக்க வேண்டும் என தெறி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர் பொங்கல் வெளியீட்டில் இருந்து தெறி படத்தின் ரீலிசை தள்ளி வைத்து அதனை ஜனவரி 23ஆம் தேதிக்கு மாற்றினார்.
மோகன் ஜி விடுத்த வேண்டுகோள்
ஆனால் திரௌபதி 2 படத்தின் இயக்குனர் மோகன் ஜி தயாரிப்பாளர் தாணுவிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார் அதாவது புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் என்னைப் போன்று வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு நீங்கள் நிறைய உதவி செய்திருக்கிறீர்கள் அப்படியான பட்சத்தில் எங்களின் திரௌபதி 2 படத்தை நிறைய தியேட்டர்களில் வெளியிடும் பொருட்டு விஜயின் தெறி படத்தின் ரீ -ரிலிஸை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட கலைப்புலி எஸ் தாணு, “புதிய இயக்குனர்கள் நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதை எங்களது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலையாய பொறுப்பாகும் அதனால் தெறி திரைப்படத்தின் ரீ ரிலீஸ் முடிவு இன்று அறிவிக்கப்படும்” என தெரிவித்து இருந்தார். இதனால் அப்படத்தின் ரீ - ரிலீஸ் தேதி மாற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
விமர்சிக்கும் இணையவாசிகள்
இதனிடையே திரௌபதி 2 படத்தின் இயக்குநர் மோகன் ஜியை இணையவாசிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். காரணம் “உங்களது படம் வெளியாக வேண்டி ரீ ரிலீஸ் செய்யப்பட இருந்த தெறி படத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டீர்கள். அதற்கு ஏற்ப அந்த படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தேதியில் வெளியாகும் அஜித்தின் மங்காத்தா படத்தின் ரீ- ரிலீஸை ஒத்தி வைக்க ஏன் நீங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் அஜித் ரசிகராக இருக்கும் நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா?, உங்கள் தலைவருக்கே எதிராக உங்களின் திரௌபதி 2 படத்தை வெளியிடலாமா? அதனை தள்ளி வைக்க வேண்டியது தானே? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு மோகன் ஜி தரப்பில் இருந்து பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜனநாயகன் ரிலீஸாகாத நிலையில் தெறி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் தள்ளிப்போயுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.