Adolescence Review : நெட்ஃப்ளிக்ஸில் 14 கோடி பேர் பார்த்த அடலசென்ஸ் சீரிஸ்..அப்படி என்ன ஸ்பெஷல்..விமர்சனம் இதோ

Adolescence Review in tamil : நெட்ஃப்ளிக்ஸில் அதிக பார்வையாளர்கள் பார்த்த வெப் சீரிஸாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ள அடலசென்ஸ் வெப் சீரீஸ் விமர்சனத்தைப் பார்க்கலாம்

Continues below advertisement

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள பிரிட்டிஷ் தொடர் அடலசென்ஸ். வெளியாகி 80 நாட்கள் கடந்துள்ள நிலையில் 141.2 மில்லியன் இந்த தொடரை பார்த்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டிரேஞ்சர் திங்ஸ் தொடரை தொடர்ந்து அதிக பார்வையாளர்கள் கண்ட வெப் சீரிஸாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்த தொடர்.

Continues below advertisement

நான்கு எபிசோட்களை கொண்ட இந்த தொடர் உலகளவில் ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த மாதிரியான படைப்புகள் உருவாகாதது ஏன் என்கிற விவாதத்தையும் தொடங்கி வைத்துள்ளது. 

Adolescence விமர்சனம்

ஜேமி மில்லர் என்கிற 13 வயது சிறுவன் தனது பள்ளியில் படிக்கும் சக மாணவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறான். ஒரு 13 வயது சிறுவன் ஏன் கொலை செய்ய வேண்டும் ? இப்படி ஒரு செயலை செய்வதற்கு பின் இருக்கும் சமூக காரணிகளை அடுத்தடுத்த எபிசோட்களில் விரிவாக ஆராய்கிறது. சமூக வலைதளங்களின் பயன்பாடு , பெற்றோர்களின் நடத்தைகள் குழந்தைகளின் மனதில் ஏற்படுத்து தாக்கமும் அவற்றின் விளைவாக அரங்கேறும் குற்றமும் என பல கோணங்களை எதார்த்தமாக கையாள்கிறது இந்த தொடர்.

குற்றவாளியான ஜேமி தனது  சக மாணவர்களால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுகிறான். இதை அவன் தனது பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. ஜேமியின் தந்தை ஒரு சாதாரண பிளம்பர். தனது மகனின் விருப்பத்திற்கு ஏற்ற எல்லா வசதிகளையும் செய்து தருகிறார். ஆனால் தனது மகன் என்ன மன நிலையில் இருக்கிறான். செல்ஃபோனில் அவன் என்ன பார்க்கிறான் என்பது பற்றி துளியும் அவருக்கு தெரிவதில்லை. அதே நேரம் பெற்றோர்கள் எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும் குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொள்வதில் இருக்கும் சவால்களையும் அடையாளம் காட்டுகிறது இந்த தொடர்.

முழுக்க முழுக்க உரையாடல்களில் நகரும் கதை என்றாலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 3 மற்றும் 4 ஆவது எபிசோட் கதைசொல்லலில் புதிய உச்சம் என்றே சொல்லலாம். குற்றம்சாட்டப்பட்ட ஜேமியின் உளவியலை தெரிந்துகொள்ள அவனுடம் ஒரு மன நல மருத்துவர் பேசுவதே 3 ஆவது எபிசோட். இதில் தன்னைப் பற்றியும் தனது தந்தையைப் பற்றியும் , பெண்களைப் பற்றியும் ஜேமியின் புரிதல் என்னவாக இருக்கிறது என்பதை அவர் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார். இளம் பருவத்திலேயே ஆண்களின் உள நிலை கட்டமைக்கப்படும் விதம் , பெண்களைப் பற்றிய அவர்களில் பொதுப்புரிதலும் புறச் சூழலால் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை துல்லியமாக ஆராய்கிறது. 

4 ஆவது எபிசோட் ஜேமி சிறைக்கு சென்றபின் அவனது பெற்றோர்கள் மற்றும் சகோதரியின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பேசுகிறது. சமூக அழுத்தங்களில் இருந்து விலகி ஒரு நாளை நிம்மதியாக செலவிட விரும்பும் ஒரு குடும்பம் சிதைந்து நிற்பதை மிகையில்லாமல் சித்தரிக்கிறது. ஜேமியின் தந்தை தனது தந்தையால் மிக கொடூரமான முறையில் வளர்க்கப்பட்டவர். தான் எதிர்கொண்ட கஷ்டத்தை தனது பிள்ளைகளுக்கு கொடுக்க கூடாது என தனது வாழ்க்கை முழுவதும் முயற்சிக்கிறார். இருந்தும் தனது குழந்தையை சரியாக வளர்க்கவில்லை என்கிற குற்றவுணர்ச்சியில் தவிக்கிறார். 

சிங்கிள் ஷாட்

இந்த சீரிஸில் அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் மற்றொரு காரணம் ஒவ்வொரு எபிசோடும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப் பட்டவை. ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் நீளமுடையவை. ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு கட் செய்யாமல் கேமரா வெவ்வேறு கதாபாத்திரங்களை பின் தொடர்ந்து கதை சொல்லப்பட்டுகிறது. ஒவ்வொரு எபிசொட்டிற்கு ஒரு நாள் வீதம் ஐந்து நாட்களின் 4 எபிசோட்களை எடுத்து முடித்திருக்கிறார்கள். இதற்கு முன்பாக பல நாட்கள் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். இந்த வகையான காட்சியமைப்பு பேசும் பிரச்சனையின் தீவிரத்தை குலைக்காமல் கதையுடன் ஒன்றியிருக்க பார்வையாளர்களுக்கு உதவுகிறது. 

ஏன் இந்தியாவில் இந்த மாதிரி ஒரு சீரிஸ் வரவில்லை

அடலசென்ஸ் சீரிஸை பலர் பாராட்டிவரும் நிலையில் இந்த மாதிரியான ஒரு தொடர் ஏன் இந்தியாவில் வரவில்லை என்கிற விவாதமும் தொடங்கியுள்ளது. திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப் இதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக பேசியுள்ளார். இந்தியாவில் நெட்ஃளிக்ஸ் தலைமை நிறுவனம் இந்த மாதிரியான ஒரு கதைக்கு எந்த சூழலில் ஒப்புதல் வழங்காது. புதுவிதமான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள ஊக்குவிக்காமல் ரசிகர்களுக்கு அதே வழக்கமான கதைகளை கொடுத்து லாபம் சம்பாதிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola