திமுக-அதிமுக-பாஜக என ரேஸில் உள்ள குதிரைகளை சாடுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விமர்சனங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. அதே நேரத்தில், விமர்சனம் இல்லாமல் எதுவும் இல்லை. அந்த வகையில், சவுக்கு இணையதளத்தை நடத்தி வரும் சவுக்கு சங்கரின் பதிவுகள், பல நேரங்களில் அதிரடியை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். குறிப்பாக திமுக தலைமை குறித்த அவரது விமர்சனங்கள், விமர்சனத்திற்கு ஆளாவது வழக்கம். 




அந்த வகையில், தற்போது போனிகபூர் தயாரித்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக இருக்கும், ‛நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் தொடர்பான கருத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியில் தயாரான காஷ்மீர் பைல்ஸ் படத்தை பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் முன்னெடுத்தனர். காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் பற்றிய அந்த திரைப்படத்தை , இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வலதுசாரி அமைப்புகள் மிகவும் சிரத்தை எடுத்தனர். 




அது பற்றி விமர்சனங்களும் , ஆதரவு கருத்துக்களும் அப்போது எழுந்தது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கும் அறிவிப்பை மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் பாலா என்பவர் முன்னெடுத்துள்ளார். அது தொடர்பான அறிவிப்பை, அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சவுக்கு சங்கர், கடும் சொற்களால் திமுகவை சாடியுள்ளார். 






 


காஷ்மீர் பைல் திரைப்படத்தை நெஞ்சுக்கு நீதி படத்தோடு ஒப்பிட்டு, கருத்து தெரிவித்துள்ள சவுக்கு சங்கர், அதை கொண்டு சேர்க்க முயற்சி எடுக்கும் திமுகவினரை கடும் சொற்களால் சாடியிருந்த நிலையில், அதற்கு திமுகவினர் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். ஆர்ட்டிங்கல் 15 என்கிற இந்தி படத்தின் ரீமேக் என்பதால், படத்தின் உணர்ச்சிபூர்வமான கதையை, இது போன்று கிண்டல் அடிக்க வேண்டாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ... நெஞ்சுக்கு நீதி... இப்போது பஞ்சமில்லாத விமர்சனத்தை சந்தித்து வருகிறது. 






 


படம் வெளியாகும் முன்பே, கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நெஞ்சுக்கு நீதி, வெளியான பின் இன்னும் பல தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள், இந்தி வெர்சனை பார்த்து நெகிழ்ந்து போனவர்கள்.