ரஜினியின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. அண்மையில் வெளியான கூலி திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற நிலையில் ஜெயிலர் 2 படத்தின் மேல் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ரஜினி தவிர்த்து இப்படத்தில் பல்வேறு மொழியிலிருந்து நடிகர்கள் நடித்துள்ளார்கள். அந்தவகையில் சந்தானம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் 2 படத்தில் சந்தானம்
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 172 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர் 2. முதல் பாகத்தை தொடர்ந்து இப்பாகத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். முந்தைய பாகத்தில் ஷிவராஜ்குமார் , மோகன்லால் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். குறைவான காட்சிகளே என்றாலும் இருவரது கதாபாத்திரத்தை நெல்சன் கையாண்டிருந்த விதம் பலரை கவர்ந்தது. அதேபோல் ரஜினிக்கு ஏற்ற விதமான மாஸ் காட்சிகளும் , நெல்சனின் தனித்துவமான டார்க் ஹ்யூமர் இப்படத்தில் சிறப்பாக அமைந்தது படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. அந்த வகையில் இரண்டாம் பாகத்திலும் இதே மாஸ் , மற்றும் ஹ்யூமரை நெல்சன் கையாள்வார் என எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் சந்தானம் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நகைச்சுவை நாயகனாக உச்சத்தைத் தொட்ட சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கியபின் தமிழ் கமர்சியல் படங்களில் பெரிய வெற்றிடம் இருந்து வருகிறது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பாலையாவுக்கு பதில் சந்தானம்
ஜெயிலர் 2 படத்தில் ரஜினி , மோகன்லால் , ஷிவராஜ்குமார் , எஸ்.ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சரமூடு , ஃபகத் ஃபாசில் , மிதுன் சக்கரவர்த்தி , வித்யா பாலன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் பாலையா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு ரூ 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. தற்போது பாலையா படத்தில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதிலாக சந்தானம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லோகேஷ் விட்டதை பிடிப்பாரா நெல்சன் ?
தற்போது ஸ்டார் படங்கள் என்றாலே அதில் பல மொழிகளில் இருந்து நடிகர்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த நடிகர்களுக்கு சரியான கதாபாத்திரங்கள் வழங்கப்படாதது ரசிகர்களிடையே அதிருபதியை ஏற்படுத்தியுள்ளது . குறிப்பாக கடைசியாக வெளியான கூலி படத்தில் நாகர்ஜூனா , செளபின் சாஹிர் , உபேந்திரா போன்ற பல கதாபாத்திரங்கள் இருந்து அவர்களை பயண்படுத்திய விதம் விமர்சனத்திற்குள்ளானது. ஜெயிலர் படத்தில் கேமியோ ரோல் என்றாலும் நெல்சன் மோகன்லால் , ஷிவராஜ்குமார் போன்ற இரு பெரிய நடிகர்களை கையாண்டிருந்த விதம் பலரை கவர்ந்தது. அந்த வகையில் ஜெயிலர் 2 படத்தில் லோகேஷ் செய்ய தவறியதை நெல்சன் செய்வார் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.