விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. ட்ரெய்லருக்கு வரவேற்பும், விமர்சனங்களும் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் நிலையில், யூடியூப்பில் இதுவரை 34 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பீஸ்ட் படமும், கன்னட யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடுத்தடுத்த நாள்களில் வெளியாக இருப்பதால் இந்தப்படங்களுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் டிரெய்லரில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, துல்கர் சல்மான் நடித்த குரூப், விஷ்னு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படங்களும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்தப்படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக, நடிகர் விஜய், சன் டிவிக்கு நேர்காணல் தந்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். இந்த நேர்காணலில் நடிகர் விஜயை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கேள்வி கேட்கிறார். இந்நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9-ம் தேதி இரவு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்