இன்றைய தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சனுக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என கனவு இருந்தது. அந்த கனவு நோக்கிய அவரின் பயணம் தான் இன்று அவரை தமிழ் திரையுலகிலின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக முன்னேற ஏணி படியாய் அமைந்துள்ளது. இந்த ட்ரெண்டிங் இயக்குநரின் 40வது பிறந்தநாள் இன்று.
கோலமாவு கோகிலா :
2018ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றி பெற்றது. அதன் மூலம் நெல்சன் திலீப்குமாருக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. யோகி பாபுவின் காமெடி படத்தின் ஹைலைட். ரசிகர்கள் வித்தியாசமான ஒரு நயன்தாராவை ரசித்தனர். முதல் படமே நார்வே பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றது.
டாக்டர் :
2021ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய 'டாக்டர்' திரைப்படம் மூலம் அவருக்குள் இருக்கும் டார்க் காமெடி திறமையை வெளிக்கொண்டு வந்தது. அப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
பீஸ்ட் :
அடுத்து நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு பிறகு அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறியது. இயக்குநராகிய மூன்றாவது திரைப்படமே தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெறும் அளவுக்கு வளர்ச்சி கண்டார். ஆனாலும் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமே கொண்டாட வைத்தது. சில விமர்சனங்களும் வந்தது.
ஜெயிலர் :
அதையும் கடந்து கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. சூப்பர்ஸ்டாருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாகவும் அமைந்தது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மாரிமுத்து, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர திரைபட்டாளத்தை இயக்கி இருந்தார்.
பாக்ஸ் ஆபீசில் சாதனை செய்த ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது 'ஜெயிலர் 2' படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆறே ஆண்டுகளில் நான்கு திரைப்படங்களை தொடர் வெற்றிப்படங்களாக கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் நம்பிக்கையை சம்பாதித்த ஒரு இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் நெல்சன் திலீப்குமார். தனது வெற்றியின் அடுத்த படியாக 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
மேலும் மேலும் தன்னுடைய திரைப்பணயத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சாதனைகளை செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்!