இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப் படும் இரண்டு படங்கள்  லியோ மற்றும் சலார். ஆனால் இந்த இரண்டு படங்களையும் பின்னுக்கு தள்ளி அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது ஒரு படம்.


ரசிகர்களால் அதிகம் ஏதிர்பார்க்கப்படும் இரண்டு  படங்கள்


ஒவ்வொரு ரசிகரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை எதிர்பார்ப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு சிலப் படங்கள் தீவிர ரசிகர்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.


அதன்படி கடந்த மாதம்வரை ஐ.எம்.டி.பி தளம் வெளியிட்ட தகவலின்படி இந்த ஆண்டில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப் படும் இரண்டும் படங்கள் விஜய் நடித்திருக்கும் லியோ மற்றும் பிரபாஸ் நடித்திருக்கும் சலார் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படம் தோல்வியை சந்தித்தாலும். சலார் படத்தை கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருப்பதால் ரசிகர்களுக்கு அதன் மீதான நம்பிக்கை குறையாமல் இருக்கிறது.




 


லியோ


அதேபோல் மற்றொரு படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் கமர்ஷியல் தமிழ் சினிமா வரலாற்றிலேயே  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், இன்னும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். லியோ படத்தின் மீது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கும் காரணம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் விஜயின் கதாபாத்திரம் எந்த மாதிரியாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வம். வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது.



எது முதலிடம்


இப்படியான நிலையில் இந்த இரண்டு படங்களில் எது மக்களால் அதிக எதிர்பார்க்கப்படுகிறது என்பது தொடர்பாக கடுமையான போட்டி நிலவி வந்தது. ஆனால் ‘குறுக்க இந்த கெளஷிக் வந்தா’ என்பது போல் இந்த இரண்டு  படங்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது விஷால், எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம்.


கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலர் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த ட்ரைலர் வெளியாகும் வரை லியோ, சலார் என போட்டி நடைபெற்று வந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. 


கட்டம் அப்படிதான் சொல்லுது




மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லரில் எஸ்.ஜே சூர்யா பேசும் ’கேங்ஸ்டர்னா டிஸிப்லீன் வேணும்’ என்கிற வசனம் ரீல்ஸ்களில் ட்ரெண்டாகிவிட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் முன்னதாக இயக்கிய AAA மற்றும் பகீரா ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலமாக அவருக்கு உருவான ரசிகர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே போல் இந்த முறை முற்றிலும் வித்தியாசமான கதைக்களமாக சைன்ஸ் பிக்‌ஷன் படமாக இயக்கியிருப்பது இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆனால் லியோ மற்றும் சலார் போன்ற இரண்டு பிரம்மாண்டமான படங்களை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு மார்க் ஆண்டனி படத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைதான். வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு வெளியாக இருக்கும் மார்க் ஆண்டனியை ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.


மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டிற்கு பிறகு ஐ.எம்.டி.பி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், 


அதிகம் எதிர்பார்க்கப்படும் பத்து இந்தியப் படங்கள்


      1.மார்க் ஆண்டனி (தமிழ்)



  1. லியோ (தமிழ்)

  2. தேங் யூ ஃபார் கமிங் (Thank You For Coming – இந்தி )

  3. சலார் (கன்னடம்)

  4. பம்பாய் மேரி ஜான் ( Bambai Meri Jaan – இந்தி)

  5. சந்திரமுகி 2 (தமிழ்)


     7.ஃபுக்ரே 3 (Fukrey 3- இந்தி)



  1. ஸ்கந்தா (Skanda – தெலுங்கு)

  2. மிஷன் ரானிகஞ்ச் – (Mission Raniganj – இந்தி )

  3. சுகி - (Sukhi – இந்தி)