நயன்தாராவை சுற்றி மீண்டும் புரமோஷன் விவாதம் எழுந்துள்ளது. யாஷ் நடிப்பில் உருவாகியுள்ளToxicபடத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசியது, தமிழில் தனது படங்களின் நிகழ்ச்சிகளில் அவர் பெரும்பாலும் பங்கேற்காதது குறித்த பழைய விமர்சனங்களையும் மீண்டும் கிளப்பியுள்ளது.
யாஷுக்காக மாறிய நயன்தாரா.. மீண்டும் எழுந்த புரமோஷன் சர்ச்சை!
யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளToxic: A Fairytale for Grown-Upsபடத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் முக்கிய நடிகர்களுடன் நயன்தாராவும் கலந்துகொண்டார். வழக்கமாக திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருந்து விலகியே இருக்கும் நயன்தாரா, இந்த விழாவில் கலந்துகொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில், தமிழில் அவர் நடித்த படங்களின் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பங்கேற்காதது தொடர்பான விமர்சனங்களும் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
புரமோஷனில் நயன்தாரா
நயன்தாரா நீண்ட காலமாகவே தனது திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வதில்லை. 2023ஆம் ஆண்டிலேயே நடிகர் விஷால், நயன்தாரா திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.
கடந்த காலத்தில் இதற்கான காரணம் குறித்து நயன்தாராவும் பேசியிருக்கிறார். Connectபடத்தின் புரமோஷனின்போது, ஒரு காலகட்டத்தில் கதாநாயகிகளுக்கு புரமோஷன் நிகழ்ச்சிகளில் உரிய முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்படவில்லை என்பதால் தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதாக அவர் கூறியிருந்தார். ஆண், பெண் நட்சத்திரங்களுக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சமீபகாலங்களில் சில விதிவிலக்குகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சிரஞ்சீவியுடன் நடித்த தெலுங்கு படமான ‘மன சங்கரா வர பிரசாத் காரு’ படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டது பேசப்பட்டது. இதையடுத்து, "தமிழ் படங்களுக்கு புரமோஷன் செய்யாத நயன்தாரா, தெலுங்கு படத்துக்கு மட்டும் ஏன் புரமோஷன் செய்கிறார்?" என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
யாஷ் அழைத்ததும் வந்த நயன்
இந்த சூழலில் டாக்சிக் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா நேரில் கலந்துகொண்டது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இதற்கான காரணத்தையும் அவரே நிகழ்ச்சியில் விளக்கியுள்ளார். புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதல்ல என்றும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தான் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை என்பதால் அவற்றில் இருந்து விலகுவதாகவும் நயன்தாரா கூறினார்.
டாக்சிக் நிகழ்ச்சியை பொறுத்தவரை பல காரணங்கள் இருந்தாலும், யாஷ் தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்தது மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போதுமானதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
