நவாசுதீன் சித்திக் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று  நடித்துள்ள ’ஹட்டி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


 நவாசுதீன் சித்திக்


கேங்ஸ் ஆஃப் வாஸெப்பூர் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார். தொடர்ச்சியாக மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நவாசுதீன் சித்திக் தற்போது நடித்துள்ள படம் ஹட்டி (எலும்பு) . இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். அக்‌ஷத் அஜய் ஷர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஜீ ஃபைவ் ஒடிடி தளம் தயாரித்து வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடுகிறது.  இந்நிலையில் ஹட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தில்  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஹட்டி ட்ரெய்லர்






”எங்களைப் பார்த்து மக்கள் ஏன் பயப்படுகிறார்கள் தெரியுமா? எங்களது ஆசீர்வாதம் ரொம்ப சக்தி வாய்ந்தது அதே நேரத்தில் எங்களது சாபம் ரொம்பவும் பயங்கரமானது. ஆனால் இதைவிட பயங்கரமானது எது தெரியுமா  நாங்கள் பழி தீர்ப்பது“ என்று  திருநங்கையாக தோன்றும் நவாசுதீன் சித்திக் பேசும் வசனத்தில் இருந்து தொடங்குகிறது ஹட்டி படத்தின் ட்ரெய்லர். தனது சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வில்லனால் (அனுராக் கஷ்யப்) ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்படுவதால் பழிதீர்க்க ஆணாக வேடமிட்டு தனது எதிரிகளை கூண்டோடு அழிக்கிறார் ஹட்டி என்கிற நவாசுதீன் சித்திக்.


திருநர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒரு ரிவெஞ்சு ஸ்டோரியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மாற்றுப்பாலினத்தவர்களை தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாக சித்தரித்து வந்த படங்களுக்கு மத்தியில் ஒரு புதிய முயற்சியாக கெத்தான ஒரு பழி தீர்க்கும் த்ரில்லராக இந்த படம் உருவாகி இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.