இந்தியாவில், திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே உயர்ந்தது, தேசிய திரைப்பட விருதுகள். உலக அளவில் எப்படி ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு திரைக் கலைஞரும் விரும்புவார்களோ, அதே போல், இந்தியாவில் தேசிய விருது வெல்வதே ஒவ்வொரு திரைப்படக் கலைஞருக்கும் ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், கொரோனா காலகட்டத்தில் வழங்கப்படாததால், அதன்பிறகு தொடங்கப்பட்ட விருது அறிவிப்புகள், தற்போது தான் 2024-ம் ஆண்டை எட்டியுள்ளன. அதன்படி, இன்று 2024-ம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார் தனுஷ்.

Continues below advertisement

சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை வென்ற தனுஷ்

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள நடிகர் தனுஷ், இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமையுடன், ரசிகர்கள் மனதில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

2002-ம் ஆண்டு, தனது சகோதரர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஒரு நடிகராக அறிமுகமான தனுஷ், முதல் படம் முதலே ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்த காதல் கொண்டேன் படமும், ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Continues below advertisement

அப்போது தொடங்கிய அவரது வெற்றிப் பயணம் இன்று வரை தொடர்கிறது. தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த அவர், ஒரு சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து, ஏற்கனவே இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார். அதன்படி, 2011-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை வென்றார் தனுஷ்.

பின்னர், 2019-ம் ஆண்டில் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்திலும் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு, மீண்டும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், 2024-ல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த தனுஷுக்கு தற்போது சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநராகவும் தேசிய அங்கீகாரம் பெற்ற தனுஷ்

நடிப்பில் மட்டும் தான் அசுரன் இல்லை, திரைப்படம் இயக்குவதிலும் அப்படித்தான் என நிரூபிக்கும் வகையில், தற்போது, அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதன் மூலம், ஒரு வெற்றிகரமான இயக்குநராகவும் ஜொலித்துள்ளர் தனுஷ்.

ஏற்கனவே, பா. பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராக தடம் பதித்த தனுஷ், அதற்கு அடுத்தபடியாக இயக்கிய படம்தான் ராயன். அதைத் தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கிய தனுஷ், தனது 4-வது படமாக இட்லி கடை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தான், தற்போது ராயன் படத்திற்காக, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை அவர் வென்றுள்ளார். இது, தனுஷின் திரை வாழ்க்கையில், மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது.