இந்திய அளவில் திரைத்துறையின் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை ஹரிஷ் கல்யாண் - எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணியில் வெளியான பார்க்கிங் படம் வென்றது. இந்தப் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர் வென்றார். மேலும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அறிவிக்கப்பட்டது. தமிழில் வெளியான லிட்டில் விங்ஸ் குறும்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்தது. அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம், ஷாருக்கானுக்கு முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதேபோல் ஷாருக் கானுடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதை 12th Fail படத்தின் நாயகன் விக்ராந்த் மாஸி பகிர்ந்து கொள்கிறார். ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமாரின் வாழ்க்கையை தழுவி உருவான 12th fail படம் சிறந்த திரைப்படமாகவும் தேர்வாகியுள்ளது.

Continues below advertisement

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் இப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.

Continues below advertisement

குறிப்பாக லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் படத்தில் குஜராத் கலவரத்தை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். ஆகவே இதன் காரணமாக தான் பிரித்விராஜ் நாயகனாக நடித்த ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் 2023 டிசம்பர் 31க்குள் தணிக்கை முடிந்த படங்கள் மட்டுமே 2023 தேசிய விருதுகளுக்கு தகுதி பெறும். ஆனால் ஆடுஜீவிதம்' திரைப்படம் 2024 இது பிப்ரவரி 1 அன்று தணிக்கை சான்றிதழ் பெற்றது. எனவே, அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் 72வது தேசிய விருதுகளில் ஆடுஜீவிதம்' திரைப்படம் விருதை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. தமிழில் 'பார்க்கிங்', ஹிந்தியில் '12th ஃபெயில்', 'தி கேரளா ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை இயக்கிய சுதீப்தோ சென் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற உள்ளார்.