தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி ஆறே படங்களின் மூலம் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் ஒரு இளைஞனாக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இன்றைய இளைஞர்களின் மத்தியில் சென்சேஷனல் இயக்குநராக விளங்கும் லோகேஷ் கனகராஜ் தனது படங்களை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பாணியில் இயக்கி வருவது அவரின் ஸ்பெஷலிட்டி.





அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்கள் அதன் தொடர்ச்சியாக அமைந்து வருகிறது. இந்த LCU ட்ரெண்ட் குறித்து சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார் LCUவில் ஒரு அங்கமான நடிகர் நரேன்.


10 நிமிட ஷார்ட் பிலிம் :


சமீபத்தில் நடிகர் நரேன் கலந்து கொண்ட ஒரு மேடை நிகழ்ச்சியில் LCU குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் நரேன் "நானும் லோகேஷ் கனகராஜூம் இணைந்து 10 நிமிட ஷார்ட் பிலிம் ஒன்றை எடுத்துள்ளோம். இது தான் LCUவின் தொடக்கமாக இருக்கும். இது கைதி 2 படத்தின் ரிலீசுக்கு முன்னரே வெளியாகும்" என்ற சர்ப்ரைஸான தகவலை தெரிவித்து இருந்தார்.


 







மேலும் இந்த ஷார்ட் பிலிம் ஓடிடி அல்லது யூடியூப் தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.


தலைவர் 171 :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். இது லோகேஷின் LCU உலகத்தில் இடம்பெறாத தனி திரைப்படமாக இருக்கும் என்பதை ஏற்கனவே உறுதி செய்து இருந்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 170' திரைப்படம் முடிவடைந்த பிறகு வரும் ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.    



 


ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் :


இந்நிலையில் இன்று காலை முதல் லோகேஷ் கனகராஜின்  ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த பரபரப்பு தகவலுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். "நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் உள்ளேன். வேறு எந்த சமூக ஊடக கணக்குகளிலும் நான் இல்லை அல்லது பயன்படுத்துவதும்  இல்லை. தயவு செய்து மற்ற போலி கணக்குகளை பின்தொடராமல் புறக்கணிக்கவும்!" எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.