ஆவேஷம்
ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான ஆவேஷம் படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது. கடந்த ஆண்டு ரோமான்ச்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியிருந்தார். மலையாளம் , தமிழ் , தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இப்படம் பெரியளவில் கவனம் பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.
காமெடி கேங்ஸ்டர் டிராமாக உருவான இப்படத்தை ஃபகத் ஃபாசில் ஒற்றை ஆளாக இப்படத்தை தூக்கி நிறுத்தினார். மலையாளத்தில் இப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப் பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆவேஷம் தெலுங்கு ரீமேக்கில் பாலையா
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஆவேஷம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மூத்த தெலுங்கு நடிகர் பாலையா எனப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பாலையா
ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான என்.டி ராமாராவின் ஆறாவது மகனான பாலையா தனது 14 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வரும் பாலையா 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் நெட்டிசன்களால் தொடர்ச்சியாக ட்ரோல் செய்யப் பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
பாலையா நடித்து கடந்த ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படம் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்பட்டது. தற்போது அவர் ஆவேஷம் படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் கலவையான விவாதங்களை தொடங்கி வைத்துள்ளன.
ஆவேஷம் படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் அனைவர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள். எந்த மொழியில் ரீமேக் செய்யப்பட்டாலும் ஃபகத் ஃபாசிலுக்கு இணையாக யாரும் நடிக்க முடியாது என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் பிற மொழியில் ஒரு படம் வெற்றிபெற்றால் அதை ரீமேக் செய்து நல்ல கதையை கெடுக்காதீர்கள். அந்தந்த மொழியில் வெளியான படங்களை அந்தந்த மொழிகளில் மக்கள் பார்க்க வேண்டும் என்கிற கருத்தும் பகிரப் பட்டு வருகிறது.