`நாகினி’ உள்பட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள பிரபல இந்தி சீரியல் நடிகை மௌனி ராய் துபாய் தொழிலதிபர் சூரஜ் நம்பியாருடன் காதல் உறவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை மௌனி ராய் தரப்பு இதுகுறித்து மௌனமாக இருந்த போதும், அவரும் சூரஜ் நம்பியாரும் இணைந்து நேரம் செலவிடுவது குறித்த படங்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில், தனது பெரும்பான்மை நேரத்தை துபாயில் சூரஜ் நம்பியாருடன் மௌனி செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காதல் ஜோடி, வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திருமண நிகழ்ச்சி துபாய் அல்லது இத்தாலி ஆகிய பகுதிகளில் நடைபெறுவதோடு, குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இருக்கும்.
மௌனி ராயின் உறவினர் வித்யுத் ரோய்சர்கார் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மௌனி ராயும், சூரஜ் நம்பியாரும் வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். திருமணம் நடைபெறும் இடம், துபாயா இத்தாலியா என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாகவும், மௌனி ராய் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தனது சொந்த ஊரில் நடத்துவார் எனவும் கூறியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் அவரும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொள்ளப் போவதாகவும் வித்யுத் ராய்சர்கார் தெரிவித்துள்ளார்.
நடிகை மந்திரா பேடியின் வீட்டில் மௌனி ராயின் தாய், சூரஜ் நம்பியாரின் பெற்றோரைச் சந்தித்த பிறகு, மௌனி ராய் - சூரஜ் நம்பியார் திருமணம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இப்படியான தகவல்கள் ஒருபக்கம் வந்துகொண்டிருக்கையில், மற்றொரு இணையதளத்தில் மௌனி ராய் ஜனவரியில் திருமணம் செய்துகொள்வதாக வரும் தகவல்கள் தவறு எனக் கூறப்பட்டுள்ளது. `மௌனி ராய் நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். எனினும், அது ஜனவரியில் நிகழப் போவதில்லை. எப்போது நடந்தாலும், அதனை அறிவிக்கும் முதல் நபர் மௌனி ராய் மட்டுமே’ என அந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மௌனி ராய் - சூரஜ் நம்பியார் திருமணம் குறித்த தகவல்கள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சில நாளிதழ்களில் வெளியாகின. எனினும் கடந்த 2019ஆம் ஆண்டு, நேர்காணல் ஒன்றில், மௌனி ராய் சூரஜ் நம்பியாருடனான உறவு குறித்த கேள்வியின் போது, அதனை மறுத்ததோடு, `சரியான நபரைச் சந்திக்கும் வரையில், பணிகளில் அதிக ஈடுபாடு காட்டப் போகிறேன்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மௌனி ராய் அடுத்து ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜூனா அக்கினேனி ஆகியோர் நடிக்கும் `பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.