விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜூனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அக்கினேனி நாகார்ஜூனா. இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடிகர் தனுஷூடன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹூரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக விமான நிலையம் சென்றார் நாகார்ஜூனா. அப்போது அவருடன் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால் நாகார்ஜூனா பாதுகாப்புக்காக சென்ற நபர், அந்த ரசிகரை பிடித்து தள்ளி விட்டார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நடந்த சம்பவத்தை கண்டுக்கொள்ளாமல் சென்ற நாகார்ஜூனாவுக்கு கடுமையான கண்டனங்களை நெட்டிசன்கள் பதிவு செய்தனர். பொது இடங்களில் செல்ஃபி கேட்டு வரும் ரசிகர்களை கையாள பல வழிகள் இருக்கும் நிலையில் இப்படியா முரட்டுத்தனமாக நடப்பார்கள் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அன்பால் தான் உங்களை பார்த்தவுடன் ஆவலுடன் ஓடி வருகிறார்கள். நீங்களும் உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் ரசிகர்களை மரியாதையாக நடத்துங்கள் என தெரிவித்தனர்.
அதேசமயம் இந்த சம்பவத்தின் போது நாகார்ஜூனா பின்னால் தனுஷ் தன்னுடைய மகனுடன் வந்துக் கொண்டிருந்தார்.ஆனால் அவரும் பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்காததும் ரசிகர்களிடையே கோபத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நாகார்ஜூனா தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், ““இது என் கவனத்துக்கு வந்தது... இது நடந்திருக்கக் கூடாது!! நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.