தமிழ், தெலுங்கு தாண்டி, வெப் சீரிஸ், பாலிவுட் எனக் கலக்கி வரும் சமந்தா டாப் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ள நிலையில்,  Myositis எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாக பதிவிட்டு தன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.


முன்னதாக சமந்தா இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அவரது எண்ணிலடங்கா ரசிகர்களும் சக நடிகர், நடிகைகளும் தொடர்ந்து சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தும், அவர் நலம்பெற வேண்டியும் பதிவிட்டு வருகின்றனர்.


நாக சைதன்யாவைப் பிரிந்த சமந்தா அதனால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தில் இருந்து சமீபத்தில் தான் மீண்டார். இந்நிலையில் மீண்டும்  Myositis நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவின் நிலை அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


 






இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா சமந்தாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகத் தகவல் வெளியாகிள்ளது.


மருத்துவமனையில் உள்ள சமந்தாவை நேரில் சந்தித்து நாகசைதன்யா ஆறுதல் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தத் தகவல் இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.


முன்னதாக இன்ஸ்டாகிராமில் நாக சைதன்யாவின் சகோதரர், நடிகர் அகிலும் சமந்தாவை நலம் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது


மையோஸ்டிஸ் எனப்படும் அரிய நோய்:


மையோஸ்டிஸ் எனப்படுவது, தசை வீக்கத்தை ஏற்படுத்தும் அரிய நோயாகும். இந்த நோய் ஏற்பட்டால், தசை பகுதிகள் அனைத்தும் பலவீனமாகவும், சோர்வாகவும், வலியுடனும் இருக்கும். இந்நோய்க்கு வயது வரம்பு கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் வரலாம். 


இந்நோய் தாக்கினால், நம் உடலில் அதிகம் தசைகள் உள்ள பகுதிகள் எனக் கருதப்படும் தோள்பட்டை, இடுப்பு மற்றும் தொடை ஆகிய பகுதிகளில் தசைப் பிடிப்பு ஏற்படும். இதனால், தோல், நுரையீரல் அல்லது இதயம் போன்ற உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம்.


மையோஸ்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் மூச்சு விடுவதற்கும் எதையாவது விழுங்குவதற்கும் பயன்படக்கூடிய தசைகள் பாதிக்கப்படும். 


நோயின் வகைகள் என்ன?


மையோஸ்டிஸ் நோயில் பல வகைகள் உள்ளன. ஆனால், மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கருதப்படுவது பாலிமயோசிடிஸ் (polymyositis) மற்றும் டெர்மடோமயோசிடிஸ் (dermatomyositis). 


Polymyositis எனும் வார்த்தையில், Poly எனப்படுவது நிறைய எனும் வார்த்தையை குறிக்கும். இதற்கு அர்த்தம், பாலிமயோசிடிஸ் வகை மையோஸ்டிஸ் தொற்று வருவதனால், உடலின் பெரும்பாலான பாகங்கள் பாதிப்படையும். 


Dermatomyositis வகை நோய் தாக்கத்தினால் தசைகளை விட உடலின் மேல் உள்ள தோள்கள் ரேஷஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 


நோய்க்கான காரணம் என்ன?





  • அதீத உடற்பயிற்ச்சி இந்நோய்க்கான காரணமாக இருக்கலாம்.

  • பல்வேறு மருந்துகளை பயன்படுத்துவதினால் இந்நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

  • உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. 


நோய்க்கான அறிகுறிகள்:





  • வாழ்வின் அன்றாட பணிகளாக கருதப்படும் தலை வாருதல், படி ஏறுதல் போன்றவை கடினமாகும்.

  • தசை பகுதிகளில் வலி ஏற்படும்.

  • கண் இமைகள், முகம் மற்றும் கழுத்து மற்றும் கைகள் மற்றும் விரல்களின் பின்புறத்தில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் சொறி ஏற்படும். 

  • கண்களைச் சுற்றியுள்ள நிறம் மாறுபட்டு வீக்கமடையும். 

  • தசைகளில், தொட்டோலே வலிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

  • தசைகள் சில நேரங்களில் வீக்கத்துடன் காணப்படும்.

  • இந்நோயினால் பாதிப்படைந்தவர்கள் உடல் இடை குறைந்து சோர்வாக காணப்படுவார்கள்.

  • இரவு நேரங்களில் வியர்க்கும்.


குணப்படுத்துவது எப்படி?



  • பிசியோதெரப்பி எனப்படும் உடற்பயிற்சி சிகிச்சையின் மூலம் இந்நோயினை குணப்படுத்தலாம்.

  • மையோஸ்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வதனால், இதிலிருந்து மீளலாம்.

  • தொண்டையை சுற்றி இருக்கும் தசைகளில் மையோஸ்டிஸ் நோய் தாக்கினால், சிலருக்கு பேசுவதில் சிரமம் ஏற்படும். இதனை, ஸ்பீச் தெரபி மூலம் குணப்படுத்த முடியும்.