கவிஞர் நா.முத்துக்குமாரின் 47வது பிறந்தநாள் இன்று. பள்ளி ஆசிரியருக்கு மகனாய்ப் பிறந்து, உதவி இயக்குனராய் பணிபுரிந்து, பின்னர் பாடலாசிரியராக அவதரித்தவர் நா.முத்துக்குமார். 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தாயை இழந்தார். தாயின் மடியில் வளர வேண்டிய பருவத்தில் தந்தையின் வழிகாட்டுதலால் தமிழின் மடியில் வளர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பச்சையப்பா கல்லூரியில்  தமிழ் இலக்கியம் படித்தார். உயர் கல்வியில் பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவராகவும் விளங்கினார்.


"தமிழ் திரைப்பட பாடல்கள் ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் பி.ஹச்டி ஆராய்ச்சியும் மேற்கொண்டார். சீமான் இயக்கிய 'வீரநடை' என்ற படத்தில் தன் பாடலாசிரியர் பயணத்தை தொடங்கினார். "முத்து முத்தாய் பூத்திருக்கும் முல்லை பூவை புடிச்சிருக்கு" எனத் தொடங்கும் அந்த பாடல் அதிக உவமை உருவகங்கள் கொண்ட பாடல் என்ற பெருமைக்கு உரியதாகும். இவரின் கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் வானமே எல்லை. 


அவரது வரிகளின் ரீவைண்ட்!




காதல், நட்பு, பிரிவு, அப்பா மகள் உறவு, அப்பா மகன் உறவு என இவர் தொடாத இடங்களே இல்லை. மிகவும் உன்னதமாகக் கருதப்படும் அப்பா மகள் உறவுக்காக இவர் எழுதிய வரிகள் மிகுந்த பாராட்டைப் பெற்றது. "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது அல்ல என்று" என்ற  வரிகளில் தந்தை மகளின் உறவின் உன்னதத்தை ஒரு படி மேலே சென்று பார்த்து விட்டார் போலும் இவர்!


தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு" என்ற பாடலில் 'தாயாக தந்தை மாறும் ஒரு காவியம்' என ஆண்களுக்கும் தாய்மை உண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் திரைப்பட பாடல்களின் பட்டியலில் மகள்களால் போற்றப்படும் அப்பாக்களை விட மகன்களால் போற்றப்படும் அப்பாக்கள் மிகக் குறைவே…. ஒவ்வொரு மகன்களுக்கும் அவர்களின் தந்தையின் அருமையை உணர்த்திய பாடல், இவர் எழுதிய "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல். இந்த பாடலைக் கேட்டு கண் கலங்காத ஆளே இல்லை எனலாம். இவரது வரிகள் அனைத்தும் நம்பிக்கையை விதைக்கும் வாழ்க்கையை வெறுத்து சோர்ந்து போய் உட்காரும் நொடியில் புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற இவரது ஒரு நாளில் என்ற பாடலைக் கேட்டால் விழுந்தால் என்ன மீண்டும் எழுந்து விடலாம் என்ற நம்பிக்கை மனதில் தோன்றும்.


தீபாவளி படத்தில் இடம் பெற்ற "போகாதே போகாதே" என்ற பாடல் காதல் பிரிவையும், ஒரு தலை உணர்வுகளையும் அழகாக எடுத்துக்காட்டும். "கல்லறையின் மீது ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி" என்ற வரிகளில் காதல்  மரணத்தைத் தாண்டி வாழும் சக்தி பெற்றது எனக் கூறியிருப்பார். 


"கல்லறை மீதுதான் பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதோ" என்ற வரிகளில் காதலின் இயலாமையை பற்றி பேசி இருப்பார். இவரது பாடல்கள் இப்படித்தான் எனக் கூறவே முடியாது. ஏனெனில் ஒவ்வொரு பாடலும், ஏன் ஒவ்வொரு வரியும்  தனித்துவமானது. 


கவிதைகளின் தொகுப்பு இவரது பாடல்:




பல கவிதைகளை தொகுத்தே ஒரு பாடலாய் எழுதியிருப்பார். இவரது பாடல்கள் ஒவ்வொரு வரியும் ஒரு கவிதை தான். மன்மதன் படத்தில் உள்ள "காதல் வளர்த்தேன்" பாடலில் அனைத்து வகையான ரசிகர்களையும் பிடித்துவிட்டார். காதல் ஜோடிகள், ஒருதலையாக காதலிப்பவர்கள், காதல் தோல்வியுற்றவர்கள் என அனைவருக்குமான பாடல்களை உருவாக்கி வைத்து விட்டுச் சென்றுவிட்டார். நீதானே என் பொன்வசந்தம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவரே !


அழகுக்கு இலக்கணம் வகுத்த 'அழகோ அழகு' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். கடைசியாக, இவர் பாடல் எழுதிய படம் 'தரமணி'. அப்படத்திலும் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். நா.முத்துக்குமார் இடம்பெறாத ப்ளேலிஸ்ட்டே  இல்லை. அதிலும் யுவன் நா.முத்துக்குமார் காம்போ அல்டிமேட். ஒரு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்தால் படம் ஹிட் ஆகுதோ இல்லையோ பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். இவரது மறைவுக்குப் பின் யுவனின் இசை சற்று மந்தமாகவே இருக்கின்றது. நா.முத்துக்குமாரின் வரிகள் இல்லாமல் போனதே அதற்கு காரணமாக இருக்குமோ என்னவோ…


ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்… என்று எண்ணித்  தவிக்கும் இவரது ரசிகர்களுக்கு மற்றும் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்கும் விதமாய் அவர் பாடல் வரிகளின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எதிரில் தோன்றுகிறார் நா.முத்துக்குமார்.