ஹினா கான் திருமணம்
இந்தி சின்னத்திரையில் மிகவும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹினா கான். பல பிரபலமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கத்ரோன் கே கிலாடி சீசன் 8 மற்றும் இந்தி பிக் பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார். நாகினி சீசன் 5 சீரியலில் நாகினியாக நடித்து பாராட்டுகளை குவித்தார். அன்லாக், ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா, ஹேக்கட் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். டேமேஜ்டு 2 என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். நேற்று ஜூன் 5 ஆம் தேதி தனது 13 வருட காதலனை திருமணம் செய்துகொண்டார் ஹினா கான்.
ராக்கி ஜெய்ஸ்வால் ஹினா கான் திருமணம்
ஹினா கான் நடித்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ராக்கி ஜெய்ஸ்வால் உடன் பழக்கம் ஏற்பட்டது. முதல் 8 மாதங்களுக்கு நண்பர்களுகாக இருந்த அவர்கள் பின் காதலர்களாக மாறினார்கள்." நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஒருமுறை நாங்கள் இருவரும் கட்டிப்பிடித்தோம் அப்போதே எங்களுக்கு தெரியும் அது காதல் என்று. வெவ்வேறு உணவுகளை சாப்பிடுவது , ஊர் சுற்றுவது எங்கள் இருவருக்குமே பிடிக்கும்" என தங்கள் காதலைப் பற்றி ஹினா கான் தெரிவித்துள்ளார்.
புற்று நோயின் போது எதிர்கொண்ட போராட்டம்
ஹினா கான் 3 ஆம் கட்ட மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட தகவல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது தன்னைவிட தனது காதலன் மன ரீதியாக ரொம்ப பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் தனக்கு ஒரு காதலனாக முழு ஆதரவு அளித்ததாகவும் ஹினா கான் தெரிவித்துள்ளார் " எனக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்ததும் அவரை ரொம்ப பாதித்தது. திடீரென்று அவரது ரத்த அழுத்தம் அதிகரித்தது. எனக்கு கீமோ தெரபி சிகிச்சை நடந்து வந்தது ஆனால் அவர் நோயாளியாகிவிட்டார். இதனால் நான் 2-3 நாட்கள் அவருடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராக்கி தியானம் செய்யக் கூடியவர், எல்லா சூழ் நிலைகளிலும் அமைதியாக இருக்கக் கூடியவர். ஆனால் அவருக்கு ஹைபர் டென்ஷன் இருப்பது பிறகு தான் தெரிந்தது. இத்தனைக்கும் நடுவில் அவர் என் உடன் இருந்தார். அவர் என்னை காதலிப்பது போல் என்னால் அவரை காதலிக்க முடியாது என்று நால் சொல்வேன். ஆனால் அவருக்கு இதெல்லாம் எந்த ஒரு காதலனும் செய்யக் கூடிய இயல்பான விஷயம் தான் என்று சொல்வார்" என ஹினா கான் தனது காதலன் பற்றி கூறியுள்ளார்
கடந்த 13 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தார்கள். இந்நிலையில் இருவருக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹினா கான் பகிர்ந்துள்ளார்.