தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் பாலாவின் தயாரிப்பில், விறுவிறுப்பான இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பிசாசு'. இந்த மிரட்டலான படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


 



மிஷ்கின் ஸ்டைல் : 


'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் மனிதனை மிருகங்களுடன் சம்பந்தப்படுத்திய இயக்குநர் மிஷ்கின், 'பிசாசு' படம் மூலம் மனிதனை ஆவியுடன் தொடர்பு படுத்தி இருந்தார். மனிதர்கள் தான் பேய் குணம் கொண்டவர்களாக இந்த உலகில் நடமாடுகிறார்கள். ஆனால் பேய்களுக்கு கூட மனித குணமும், நட்புறவும் இருக்கிறது என்பதை தன்னுடைய ஸ்டைலில் படமாக்கி இருந்தார். அது தான் 'பிசாசு'. 


எளிமையான கதை : 


மிரள வைக்கும் காட்சிகள், ராட்ச பேய்கள், கொடூரமான முகங்கள் என ஒரு பேய் படத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு அம்சமும் இல்லாமல் மிகவும் எளிமையான ஒரு திரைக்கதைக்கு தன்னுடைய கேமரா மூலம் உயிர் கொடுத்து அழகாக மிரட்டி இருந்தார் இயக்குநர் மிஷ்கின். 


 



கதை சுருக்கம் :


முதல் காட்சியில் அழகிய புன்னகையுடன் நாயகி பிரயாகா முகம் பளிச்சிட வந்த அடுத்த கணமே காரில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடுகிறாள். பலரும் வந்து எட்டிப் பார்க்கையில் நாயகன் நாகாவும் அதில் ஒருவனாக நிற்க மருத்துவமனைக்கு விரைகிறார்கள். நாயகியின் கடைசி நொடி நாயகனின் கையை பிடித்தவாறு உயிர் பிரிகிறது. இந்த அதிர்ச்சியான சம்பவம் அந்த இளைஞனின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. வயலின் இசைக்கலைஞனான அவனால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. 


 



தொடரும் திடுக் சம்பவங்கள்..


மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட அந்த நாயகன் தன்னுடைய வீட்டில் அமானுஷ்ய சக்தி ஏதோ இருப்பதை உணர்கிறான். பண இடையூறுகளை சந்தித்ததால் ஒரு கட்டத்தில் இதற்கு காரணம் அந்த ஆவி தான் என தவறாக நினைக்கிறான். ஆனால் உண்மையில் அவனை காப்பாற்றுவது அந்த ஆவி தான் என்பதை அறிந்து அந்த பெண்ணின் விபத்துக்கு காரணமானவர் யார் என்பதை தேட ஆரம்பிக்கிறான். அந்த இடைப்பட்ட காலத்தில் அவன் சந்திக்கும் விபரீதங்கள் என்னென்ன? இறுதியில் என்ன நடந்தது? ஆவியின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். ஸ்வாரஸ்யம் கலந்த திரைக்கதையுடன் மிரட்டலாக நகர்த்தி இருந்தார் இயக்குநர் மிஷ்கின்.


நாயகன் நாகா படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் என்றால், நாயகி பிரயாகா முதல் காட்சியில் மட்டுமே அழகான முகத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அதை படம் முழுக்க டிராவல் செய்ய வைத்தார். 


இயக்குநரின் எதிர்பார்ப்பு :


நாயகியின் அப்பாவாக நடித்திருந்த நடிகர் ராதாரவியின் எதார்த்தமான நடிப்பைப் பற்றி சொல்லி தெரிய தேவையே இல்லை. தன் மகளின் மீது அவர் காட்டும் பாசத்தை வெளிக்காட்டும் இடங்களில் பார்வையாளர்களையும் உருக வைத்து விடுகிறார். தான் என்ன நினைத்தாரோ அதை அப்படியே படமாக்கியதோடு எந்த எண்ணத்துடன் மக்கள் அதை பார்க்க வேண்டும் என எதிர்பார்த்தாரோ, அதை அதே உணர்வோடு ரசிக்க வைக்கும் திறமைசாலி மிஷ்கின். இப்படம் அவரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்!