வெங்கல் ராவ் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, விஜயவாடா மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்


வடிவேலுவுடன் இணைந்து தனது காமெடியால் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் மற்றும் ஸ்டன்ட் கலைஞர் வெங்கல் ராவ் சில நாட்களுக்கு முன்பு தனது வறுமை நிலை குறித்து பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலுவோடு நடிப்பவர்கள் குழுவில் இருந்த எவருக்குமே வடிவேலு நடிக்க தடைபெற்ற பிறகு வேறு எந்த கதாபாத்திரமும் வாய்க்காததால் படவாய்ப்பின்றி மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. தொடர்ந்து தனது காமெடி டீமுடன் சேர்ந்து மக்களை சிரிக்க வைத்த வடிவேலு, ஒரு கட்டத்தில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்ற படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகனாக நடித்த வடிவேலு அத்தனை படங்களில் தன்னுடன் எப்போதும் நடிக்கும் குழுவில் உள்ள மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது.



இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வடிவேலுவுக்கு பட வாயப்பு இல்லாமல் முடங்கிய நிலையில், அவருடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. வேறு யாரும் அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு தருவதும் இல்லை. அப்போதுதான் அல்வா வாசு போன்ற நடிகர்கள் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினர். அந்த வகையில் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார் நடிகர் வெங்கல் ராவ். இவர் வடிவேலுவோடு புகழ்பெற்ற பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். உதாரணத்திற்கு கந்தசாமி படத்தில் கோயிலில் தேங்காய் விற்கும் வடிவேலுவிடம் வம்பிழுப்பது, தலையில் வைத்த கையை எடுத்தால் குரல்வளையை கடிக்கும் காமெடி போன்றவை இவரது பெயர் சொல்லும்.


ஆந்திராவை சேர்ந்த இவர், முதலில் ஸ்டன்ட் கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஸ்டண்ட்டில் உடல் ஒத்துழைக்காததால், காமெடி நடிகராக அறிமுகமானார். அதன்படி நீ மட்டும் படத்தில், நகைச்சுவை நடிகராக அறிமுகமான அவர் தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். 



ஆனால் வடிவேலுக்கு ரெட்கார்டு போடப்பட்டதை தொடர்ந்து வெங்கல் ராவ் உட்பட பல நடிகர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெங்கல் ராவ் தனது சினிமா அனுபவம், மற்றும் தற்போது தனக்கு படவாய்ப்பு கிடைக்காததால்,தனது வாழ்ககை எந்த நிலையில் உள்ளது என்பதை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு சமீபத்தில் அவர் மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.


தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் பரந்துள்ள படக்குழுவுடன் அங்கு வடிவேலுவின் பாடலை உருவாக்கி வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார்.



இந்நிலையில் வடிவேலுவோடு முன்பு நடித்த வெங்கல் ராவ் ஒரு தனியார் யூட்யூப் சேனல் பேட்டியில் கூறுகையில், "நான் ஆந்திராவை சேர்ந்தவன், சினிமாவில் பைட் மாஸ்டாராக அறிமுகமானேன். 25 வருடங்களுக்கு பிறகு என்னால் சண்டை காட்சிகளில் நடிக்க எனது உடல் ஒத்துழைக்கவில்லை. அதன்பிறகு வடிவேலு சாரை சந்தித்து எனக்கு வாய்ப்பு கேட்டேன். அவரும் உடனே எனக்கு வாய்ப்பு கொடுத்தார். வடிவேலு அண்ணன் இல்லை என்றால் நான் இங்கு உட்கார்ந்திருக்க முடியாது என் வாழ்கையில் பெரிய உதவி செய்தவர் வடிவேலு அண்ணா.


என்னை மட்டுமல்ல பல பேரை வடிவேலு வாழ வைத்துள்ளார். அவருடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது சினிமாவில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நானும அவரிடம் போய் வாய்ப்பு கேட்கவில்லை. ஆனால் என் சிங்கம் இப்போது வரப்போகிறது. இனிமேல் எனக்கு கவலை இல்லை. என் சிங்கம் வந்த உடனே என்னை போன்று பலரும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவோம். நானும் யாரிடமும் காசு கேட்கவில்லை. எங்களுக்கு பட வாய்ப்பு கொடுங்கள் நாங்கள் உழைத்து முன்னேறுகிறோம் என்றுதான் சொல்கிறேன். இப்போது கொரோனா தொற்று வந்து பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது", என்று கூறியுள்ளார் வெங்கல் ராவ் தனது குடும்பத்தின் பின்னணி பற்றி உணர்ச்சிவசமாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.