தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமான நிலையில், அவரது குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 


சர்ச்சைகளில் சிக்கிய 800 படம் 


சினிமாவில் வாழ்க்கை வரலாற்று படங்கள் என்பது புதிதல்ல. அரசியல் தலைவர்கள் முதல் சமூகத்தில் பிரபலமாக இருக்கும் நபர்கள் வரை பலரின் வாழ்க்கையும் படமாக வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படங்கள் எல்லாம் எடுக்கப்பட்ட பிறகு கடும் விமர்சனத்திற்கு உள்ளானதே தவிர, அதற்கு முன்னால் எத்தகைய பிரச்சினையும் ஏற்படவில்லை. இப்படியான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக தமிழில் எடுக்கப்பட போவதாக அறிவிப்பு  வெளியானது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


அதற்கு காரணம் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்க இருந்தது பிரபல நடிகர் விஜய் சேதுபதி. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதை குறிப்பிடும் 800 என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியான நிலையில், இலங்கை இறுதிக்கட்ட போர் சமயத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி, விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என போராட்டம் வலுத்தது. 


விலகிய விஜய் சேதுபதி.. உள்ளே வந்த  மதுர் மிட்டல்


பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கோரிக்கை விடுத்ததால் முரளிதரனே விஜய் சேதுபதியை படத்தில் நடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர் படத்தில் இருந்து விலகினார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் முத்தையா முரளிதரன் பிறந்தநாளை முன்னிட்டு 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 


இந்த படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரன் ஆக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும்,  ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், ஜிப்ரான் இசையமைப்பாளராகவும், பிரவீன் கே.எல். எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். 


800 படம் இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 5 ஆ,ம் தேதி ட்ரெய்லரை முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கள் வெளியிட்டார். இப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முரளிதரன் சொன்ன அதிர்ச்சி தகவல்


இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முத்தையா முரளிதரன் 800 படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி நான் ஐபிஎல் போட்டிக்காக ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ​​விஜய் சேதுபதி படப்பிடிப்புக்காக அதே ஹோட்டலில் தங்கியிருப்பதாக 800 படத்தின் இயக்குநர் தெரிவித்தார். அவர் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நிலையில் இரண்டு மணி நேரமாக பொறுமையாக முழு கதையையும் கேட்டார். பின் நடிக்க விருப்பப்படுவதாக தெரிவித்தார். 


ஆனால் படத்தில் நடிக்கக்கூடாது என சொல்லி விஜய் சேதுபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதோடு, அவரது குடும்பத்தினர் மிரட்டப்பட்டனர். 800 திரைப்படம் ஒரு விளையாட்டு மனிதனின்  சம்பந்தப்பட்ட திரைப்படம் தான் தவிர, இது அரசியல் அல்லது வேறு எதனுடனும் தொடர்புடையது அல்ல எனவும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.