நெட் பிளிக்ஸில் வெளியாகியுள்ள The Hunt For Veerappan தொடர் பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளதோடு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழக - கர்நாடக அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக திகழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து   ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கூட்டாளிகள், ஊர் மக்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் அனைவரது பார்வையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மனைவி முத்துலட்சுமி பேசிய முதல் எபிசோடில் இடம் பெற்ற கருத்துகளை கீழே காணலாம். 


வீரப்பனின் காதல்


வீரப்பனை யாரும் கிட்ட போய் பார்த்தது இல்லை. யானை கொன்னதால வனத்துறை, போலீஸ் எல்லாம் அவரை தேடுறாங்க. அவரையெல்லாம் கண்டே பிடிக்க முடியாதாம்ன்னு சொல்வாங்க. இப்படி இருக்கையில் என் வீட்டுக்கு எதிரே பள்ளத்துல தங்கியிருந்தாங்க. தோளின் மேல் துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவர் நடந்து வருவார். முன்னாடி இவர் பின்னால் 15,20 பேர் வருவாங்க. அது பார்க்கவே அழகாக இருக்கும். 


நான் ஒரு மரத்தின் பின்னால் போய் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் பெயரை சொல்லி அழைத்தார். நான் எப்படி நம்ம பெயர் தெரியும் என பயந்தபடி சென்றேன். உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் சொன்னார். ‘நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். நீ என்ன சொல்ற என கேட்டார். நீ சம்மதிக்கவில்லை என சொன்னால், நான் வாழ்க்கையில் எந்த பொண்ணையும் திரும்பி பார்க்க மாட்டேன். என் இதயத்தை பாறாங்கல்லாக மாற்றிக்கொள்வேன்’ என தெரிவித்தார்.


நான் அதுலேயே என் மனதை பறிகொடுத்து விட்டேன். இந்த சம்பவம் நடக்கும்போது எனக்கு 14, 15 வயசு இருக்கும், வீரப்பனுக்கு 39 வயசு இருந்துச்சு. என்னுடைய வாழ்க்கை இப்படி தான் போகும் என நான் எதையும் எதிர்பார்க்கல. யாரையும் வந்தா முதல்ல சாப்பிட்டியான்னு தான் கேட்பாரு.


வீரப்பனின் நேர்மை


மக்கள் வீரப்பன் பேச்சை கேட்க காரணம், அவரது நேர்மை தான். வாக்கு கொடுத்தால் அதிலிருந்து மாறமாட்டார். வெளியே வந்து நாம வாழ தான் போறோம்ன்னு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துட்டே இருப்பார். அசாம்ல போய் தலைமறைவா வாழலாம்ன்னு சொன்னாரு. எங்க கல்யாணம் நடக்குறதே வெளியே தெரிய கூடாதுன்னு இருந்தாரு. தாலி கட்டுறப்ப கூட முகத்துல சந்தோசமே இல்ல. அவருக்குள்ள ஒரு வருத்தம் இருந்துச்சு.


தாலி கட்டுற அன்னைக்கு கூட காட்டுல சண்டை நடந்துச்சு. நாங்க வீட்டுக்கு தான் போறோம். ஒரு பையன் பாலாற்றில் இருந்து வந்து, ‘மாமா, கர்நாடகா போலீஸ், தமிழ்நாடு போலீஸூக்கும் எங்களுக்கும் சண்டை. ஒன்னுமே பண்ண முடியல. கட்டையல அள்ளிட்டு போனதோடு லாரிக்கு தீ வச்சுட்டாங்க’ என சொன்னார். 


முதல்வருக்கு சந்தன மரத்துல கட்டில் செஞ்சி கொடுத்தீங்க. அப்ப நீங்க செஞ்சா சரி, நாங்க செஞ்சா தப்பா, என்னுடைய வாழ்வாதாரத்துக்கு நான் தப்பு செஞ்சா எப்படி தப்புன்னு சொல்லுவீங்கன்னு கேட்பாரு” என அதில் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.