இயற்கை படத்தில் இடம்பெற்று காதலர்களின் சோகக்கீதமாக உருவான காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் உருவான கதையை காணலாம்.
இயற்கை படம்
2003 ஆம் ஆண்டு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா, பசுபதி, கருணாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “இயற்கை”. இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். காதலர்களால் இன்றைக்கு கொண்டாடப்படும் இயற்கை படம் ரிலீசான சமயத்தில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்படியான நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
பாடாய்ப்படுத்திய திப்பு
அந்த பாடல் உருவானது பற்றி பாடகர் திப்பு நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பார். அதாவது, “என்னை வைத்து செய்த பாடல்களில் இயற்கை படத்தில் இடம்பெற்ற “காதல் வந்தால் சொல்லி அனுப்பு” பாடலும் ஒன்று. இந்த பாட்டுக்காக வித்யாசாகரை படுத்தி எடுத்துவிட்டேன். கிட்டதட்ட 4 மணி நேரம் அந்த பாடலை ரெக்கார்டு செய்தார்கள் என திப்பு கூறினார்.
கோபப்பட்ட வித்யாசாகர்
தொடர்ந்து பேசிய வித்யாசாகர், ‘அந்த குறிப்பிட்ட பாடல் எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது. அந்த பாடல் பதிவு செய்த நாள் ஜனவரி 1 ஆம் தேதியாகும். அன்றைக்கு நான் ஒரு இடத்துக்கு வருவதாக உறுதி கொடுத்திருந்தேன். அன்னைக்கு மதியம் 2 மணியளவில் நான் வந்துவிடுவேன் என சொல்லிவிட்டேன். கிட்டதட்ட அந்த இடம் சென்னையில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. அதனால் காலையில் திப்பு உடனே பாடிவிடுவான் என அழைத்து பதிவையும் தொடங்கி விட்டேன். ஆனால் அவனோ பாடவே மாட்டேங்குறான், தப்பு தப்பா பாடுறான். நான் சொன்னதையே பாடமாட்டேங்குறான்.
நான் ரொம்ப பொறுமையான ஆளு. ஒரு பாடல் ரெக்கார்ட் பண்ணுவதற்கு முன்னால் நிறைய ரிஹர்சல் பார்ப்பேன். பாடலை கேட்டு, அவர்கள் புரிந்து பாட வேண்டும் என நினைப்பேன். எனக்குள் ஊறிய பாடலை பாடுபவர்கள் கேட்டுவிட்டு ஒரே நிமிடத்தில் அதே மாதிரி பாடுவது எல்லாம் சாத்தியமே இல்லாதது. 100 சதவிகிதம் நடக்காது என்பதால் பாடல் பதிவில் நேரம் எடுக்கும்.
ஆனால் அன்னைக்கு என்னுடைய பொறுமையை திப்பு சோதித்து விட்டான். என்னுடைய முகம் மாறிவிட்டால் திப்பு மேலும் மேலும் தப்பு பண்ணும் கேரக்டர் கொண்டவன். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து சொல்லியே விட்டேன். நான் மதியம் இருந்த நிகழ்ச்சியை சொல்லி சீக்கிரமே பாட வேண்டும் என முன்னரே சொல்லிவிட்டேன். ஆனால் மதியம் 12.30 மணி வரை பல்லவியே பாடிக் கொண்டிருக்கிறான். இன்னும் சரணம் வேற இருக்கு. கடைசியில் 3.30 மணி ஆகிடுச்சி. சரணத்தில் கடைசி 2 வரி இருக்கும்போது நீ எதையாவது பாடு என சொல்லிவிட்டு நான் கிளம்பி விட்டேன். அந்த பாடல் பதிவு முடியும்போது நான் இல்லை’ என தெரிவித்தார்.
எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது
தொடர்ந்து பேசிய திப்பு, ‘எனக்கு வித்யாசாகர் சார் சொல்லும்போது புரிந்தது. ஆனால் ரெக்கார்ட் பண்ணும்போது சரியாக வரமாட்டேங்குது. அவர் பாடிக்காட்டும்போது சின்ன சின்ன மாடுலேஷன்களை புரிந்தால் போதும். ஆனால் அன்னைக்கு எதுவும் சரியாக வரவில்லை. கிட்டதட்ட “காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. உயிரோடிருந்தால் வருகிறேன்” என்ற இரண்டு வரிக்காக 2 மணிநேரம் டேக் எடுத்தோம். அந்த பாடலை பாடி எனக்கு காய்ச்சலே வந்து விட்டது. குரலும் போய்விட்டது. இதுக்குமேலே முறையாக பயிற்சி எடுத்து பாட்டு படிக்க வேண்டும்’ என்றெல்லாம் தோன்றியது. அதேசமயம் பாடல் நன்றாக வந்தது என பாராட்டினால் என்னுடைய பயம், தயக்கம் எல்லாம் பறந்து போய்விடும் என கூறினார்.