தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் சமூக வலைத்தளம் மூலம் உதவி என்ற பெயரில் பண மோசடி நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

ஓடி ஓடி உதவும் ஜி.வி.பிரகாஷ்

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்ற பெயரில் சினிமாவில என்ட்ரி கொடுத்தாலும் தனது தனித்துவமான திறமையால் அனைவரையும் கவர்ந்தார். டார்லிங் படம் மூலம் ஹீரோவாகவும் அடி எடுத்து வைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் உதவுவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர் யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் உடனடியாக தன்னால் முடிந்த அளவிற்கு பணம் அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் mom little king என்ற ஒரு ட்விட்டர் ஐடியில் இருந்து நேற்றைய தினம் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஒரு உதவி கேட்டு பதிவு வெளியானது.

Continues below advertisement

அதில், “கண்ணீருடன் உண்டான பதிவு. எங்களுக்கு சிறு வயதில் அப்பா தவறி விட்டார்கள். அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்து விட்டு இருந்தார்கள். இப்போது அம்மாவும் இறந்து விட்டார்கள். நானும் தங்கச்சியும் படிக்கிறோம். இறுதி சடங்கு பண்ணுவதற்கு போதிய வசதி மற்றும் உதவி பண்ணுவதற்கு யாரும் இல்லை. இதனால் நானும் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். எங்களுக்கு இறுதி சடங்கு பண்ண உதவி பண்ணுங்க அண்ணா” என கோரிக்கை விடுத்து ஜி.வி.பிரகாஷ் குமாரின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து உதவி கேட்கப்பட்டது.

பண மோசடி

இதனைக் கண்டு பதறிப்போன ஜிவி பிரகாஷ் உடனடியாக அந்த உதவி கேட்ட நபரின் எண்ணை வாங்கி அவருக்கு ரூபாய் 20000 அனுப்பி உள்ளார். இதனை ஸ்கிரீன்ஷாட்டாக தனது சமூக வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டார். அதில் பிரசன்ன சதீஷ் என்ற நபருக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் பணம் அனுப்பி உள்ளார். மேலும் அவரின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இந்த உதவியை பார்த்த சில ரசிகர்களும் பிரசன்ன சதீஷ் அக்கவுண்டிற்கு பணம் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் தனது அம்மா இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட புகைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது எனவும், அந்த புகைப்படம் அடங்கிய வீடியோ youtubeல் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரை ஏமாற்றியதாகவும் இணையவாசிகள் ஆதாரத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் உதவி கேட்ட பதிவிலும் இருந்ததாக கூறப்படும் பெண் 2022 ஆம் ஆண்டு மரணித்ததாகவும் இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு மோசடி செய்வதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுபோன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் இனி வரும் காலத்தில் சிக்கல் ஏற்படலாம் எனவும், யாரேனும் பண உதவி கேட்டால் தயவு செய்து தீர விசாரித்து உதவ வேண்டும் எனவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.