நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.300 கோடியை எட்டியுள்ளதால் இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் விக்ரம் படத்தின் வசூல் பல படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் கூட்டம் கூட்டமான மக்கள் தியேட்டர்களுக்கு 3 வாரங்களை கடந்தும் படையெடுத்து வருகின்றனர்.


படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷூக்கு காரும், துணை இயக்குநர்களுக்கு பைக்கும், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்ஹாசன். 


இதனிடையே விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கமல்,  கடந்த  10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆன  படம்  விக்ரம் தான் என தெரிவித்தார். இது தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. 






இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியாக உள்ள கமலுக்கு இசைஞானி இளையராஜா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!!...மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.