நடிகர் விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. இதனிடையே ட்விட்டரில் பயனாளர் ஒருவர், விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த காட்சியில் விஜயகாந்த், விவேக் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். 


இந்த பதிவை குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நகைச்சுவை ஜாம்பவான் விவேக் மிஸ் செய்கிறேன். அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு என குறிப்பிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவில் கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதிவேண்டும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விவேக். புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து தமிழ் சினிமாவின் விஜய், அஜித், விஜயகாந்த் தொடர்ந்து கிட்டதட்ட முன்னணி மற்றும் இளம் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார். பொதுவாக விவேக் காமெடி என்றாலே அதில் சமூக கருத்துகள் நிறைந்திருக்கும்.


இதனால் அவர் சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். லஞ்சம், மக்கள் தொகை அதிகரிப்பு, அரசியல், மூட நம்பிக்கை உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளை கையில் எடுத்து அதை காமெடி வழியாக மக்களுக்கு சொன்னார். சொல்லி அடிப்பேன் படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரீ கொடுத்தார். ஆனால் அப்படம் ரிலீசாகவே இல்லை. ஆனால் நான் தான் பாலா, பாலக்காட்டு மாதவன் ஆகிய படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வெளியானது.


இவ்விரு படங்களும் விவேக் நடிப்பிற்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. நாடக்கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கிய விவேக், 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை கலைஞனாக திகழ்ந்தார். மேலும் அப்துல்கலாம் வழிகாட்டுதலில் நாட்டின் வறட்சியைப் போக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் திட்டத்தை அவ்வப்போது செயல்படுத்தி வந்தார்.