இன்றைக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாள். 2008-ஆம் ஆண்டு நகுல், சுனைனா நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் வந்த ‘நாக்க முக்கா’ பாடல் வைரல் ஹிட் ரகம். சோஷியல் மீடியா இல்லாத அந்த காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் ஒலித்த அந்த பாடல், இப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வந்த பிறகும் டிரெண்டிங்கில் இருக்கும் டாப் பாடல்.


ஆனால், நாக்க முக்கா பாடல் ஹிட்டாவதற்கு முன்பே, சுக்ரன் படத்தில் சப்போஸ் உன்ன காதலிச்சு, டிஷ்யூம் படத்தில் டைலாமோ டைலாமோ என தன்னுடைய அடிக்டீவ் இசையால் ரசிகர்கள் இந்த பாடல்களை முனுமுனுக்க வைத்தவர். அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து கொண்டே இருந்தார். ஆனால், இதில் சர்ப்ரைசிங்கான விஷயம் என்னவென்றால், சப்போஸ், டைலாமோ, ஆத்திச்சூடி போன்ற பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதியதும் விஜய் ஆண்டனிதான்.



பாடல் வரிகளில், ஒரு சில வார்த்தைகளை வைத்து அசத்தலான மெட்டுக்களை போடுவதில் விஜய் ஆண்டனி கில்லாடி. அந்த வரிசையில் வரும் பாடல்கள்தான் ஆத்திச்சூடி, நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் பியா பியா, நான் படத்தில் மக்காயலா மக்காயலா, சலிம் படத்தில் மஸ்காரா பாடல் வரை இவர் இசையமைத்ததில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெப்பி பாடல்கள் என்றைக்கும் பார்டி ரகம்தான்.


புது முகங்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி, விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களும் இசையமைக்க ஆரம்பித்தார். வேட்டைக்காரன், வேலாயுதம், உத்தம புத்திரன் போன்ற ஆல்பங்களும் கவனிக்க வைக்க கூடிய பாடல்களை கொண்டது. ஆல்பமாகவே இந்த படங்களின் பாடல்கள் அப்போது ஹிட் என டிக்ளேர் செய்யப்பட்டவை.



பெப்பி, பார்டி பாடல்களுக்கு இசையமைப்பதில்தான் விஜய் ஆண்டனி பெஸ்ட் என வகைப்படுத்திவிட முடியாது. நான் அவன் இல்லை ‘ஏன் எனக்கு மயக்கம்’, நினைத்தாலே இனிக்கும் படத்தில் ‘அழகாய் பூக்குதே’, அங்காடி தெரு ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’, பிச்சைக்காரம் அம்மா பாடல் என தனது கரியரில் சில ரசிக்கும்படியான மெலடிகளையும் தட்டிவிட்டுள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு இருக்கும் ரசிர்களைப்போல, அவரது குரலுக்கும் தனியே ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பிரியாணி படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் ‘எதிர்த்து நில்’ பாடலில் சக இசையமைப்பாளர்களுடன் விஜய் ஆண்டனி பாடியிருப்பார். இந்த பாடலில், இவரது போர்ஷன் மட்டும் சூப்பர் ரகமாக தனித்துவமாக இருக்கும். 


பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பது என திரைத்துறையில் தனது கரியரை தொடங்கிய விஜய் ஆண்டனி, நடிப்பிலும் எண்ட்ரி கொடுத்தார். ‘எதுக்கு இந்த வம்பு’ என கமெண்ட் செய்தவர்களுக்கு மத்தியில், தான் நடித்த படங்களை வியாபார ரீதியாக வெற்றியடையவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலான படங்களிலும் நடித்தார். நடிப்பை தொடர்ந்து இப்போது அவரது பிறந்தநாள் அன்றைக்கு இயக்குனராகவும் அறிமுகமாக இருப்பதாக அறிவித்துள்ளார். புது எண்ட்ரிக்கு வாழ்த்துகள், கூடவே ஹாப்பி பர்த்டெ விஜய் ஆண்டனி!