தமிழ் சினிமாவில் எத்தனை விதமான பாடல்கள் இருந்தாலும் கானா  பாடல்களுக்கு ஒரு தனி மவுசு இருக்கும். அப்படி கானா பாடல்களின் தேவ தேவனாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு இசையமைப்பாளர், தேனிசை தென்றல் தேவா. அந்த இசை கலைஞருக்கு இன்று 72-வது பிறந்தநாள். 



ரஜினி டைட்டில் டியூன் :


தமிழ் சினிமாவில் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசை ஜாம்பவான்கள் புகழின் உச்சியில் இருந்தாலும், சில இசையமைப்பாளர்கள் எப்போதும் தனக்கான முத்திரையை அழுத்தமாக தக்கவைத்து செல்வார்கள். அப்படி கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் தேவா. கானா பாடல்களை தன் அடையாளமாய் கொண்டு இருந்தாலும், அதை ரசிகர்களுக்கு தேவையானபடி, திரைப்படங்களுக்கு ஏற்றபடி மாஸ் எசன்ஸோடு கொண்டு சேர்த்தவர். இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைட்டிலுக்கு பின்னணியில் ஒலிப்பது தேவாவின் இசை. இதுபோல அவரின் முத்திரைகள் பல இன்றும் நிலைத்து நிற்கிறது. 







தேவாவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம்:


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த தேவா இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் வெளியாகவே இல்லை. அதை தொடர்ந்து பல படங்களில் பணியாற்றினாலும் அவை அனைத்தும் பாதியிலேயே முடிவுக்கு வர அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம், அதிர்ஷ்டம் இல்லாத இசையமைப்பாளர் என்பதுதான்.


ஆறு ஆண்டுகள் தோல்வியை மட்டுமே சந்தித்த தேவா ஒரு பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் மீண்டும் எழுந்து வெற்றிக்கனியை சுவைத்த திரைப்படம் 'அண்ணாமலை'.


தனக்கு கிடைத்த அந்த அற்புதமான வாய்ப்பை சிறிதும் வீணடிக்காமல் ஒரே படத்தில் உலகளவில் பிரபலமானார். இப்படம்தான் அவரின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். அதனை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய கொடிகட்டி பறந்தார். ஏ.ஆர். ரஹ்மான் ஒரு புறம் கொடியை நாட்டி இருந்தாலும், தேவா கொடியும் உயரத்தில் பறந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 






ஸ்டார் ஹிட்ஸ் கொடுத்த இசையமைப்பாளர்:


தொடர்ச்சியாக சூப்பர் ஸ்டார் படங்களான அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என அடுக்க உலகநாயகனின் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் மூலம் தேவாவின் இசை எங்கும் ஒலித்தது.


சூப்பர் ஸ்டார், உலகநாயகன் மட்டுமின்றி முகவரி, குஷி, நேருக்கு நேர், பிரியமுடன், அமராவதி, ஆசை, ரெட், காதல் கோட்டை, ஒன்ஸ்மோர், நினைத்தேன் வந்தாய் என அஜித், விஜய் படங்களிலும் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர். இன்றும் இப்படத்தின் பாடல்கள் ஆல் டைம் ஃபேவரட் பாடல்கள். 


தேனிசை தென்றல் தேவா எந்த அளவிற்கு தோல்வியையும், அவமானத்தையும் சந்தித்தரோ அதே அளவிற்கு புகழின் உச்சியிலும் நட்சத்திரம்போல மின்னினார் இந்த இசை கலைஞன். அன்றும் இன்றும் என்றும் அவரின் இசைக்கு ரசிகர்கள் அடிமையே. 


ஹேப்பி பர்த்டே தேவா சார் !!!