நெப்போட்டிஸம் பற்றி சாய் அப்யங்கர்
பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரினியின் மகன் சாய் அப்யங்கர் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர். கட்சி சேர , ஆச கூட என இவர் வெளியிட்ட இரண்டு பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூர்யா நடிக்கும் கருப்பு , அட்லீ அல்லு அர்ஜூன் படம் , ராகவா லாரன்ஸ் நடிக்கும் பெண்ஸ் , பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டூட் , கார்த்தி நடிக்கும் மார்ஷல் மலையாளத்தில் பால்டி , எஸ்.டி.ஆர் 49 , எஸ்.கே 24 என அடுத்தடுத்து பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் நியமிக்கப்பட்டார்.
சினிமாவில் பல வருடங்களாக இருப்பவர்கள் வாய்ப்பு இல்லாமல் தத்தளித்து வரும் சூழலில் ஒரு படம் கூட வெளியாகாமல் இத்தனை பட வாய்ப்புகள் சாய் அப்யங்கருக்கு வந்தது குறித்து பல விதமாக கருத்துக்கள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டன. தனது பெற்றோர்கள் சினிமாத் துறையில் உள்ளவர்கள் என்பதாலேயே சாய் அப்யங்கருக்கு இந்த வாய்ப்புகள் கிடைத்ததாக பலர் கூறினார்கள். இந்த விமர்சனங்களுக்கு சாய் அப்யங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார்
செல்வாக்கால் சினிமாவுக்கு வரவில்லை
" நான் இப்போது வேலை செய்பவர்கள் எல்லாரும் ஜாம்பவான்கள். ரசிகர்களே என்னைப் பற்றி இவ்வளவு யோசிக்கும்போது என்னை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர்கள் எவ்வளவு யோசித்திருப்பார்கள். நான் செல்வாக்கை பயன்படுத்தி எல்லாம் சினிமாவிற்குள் வரவில்லை. எனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்த பென்ஸ் பட தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்வேன். கட்சி சேர ஒரு பாட்டை மட்டுமே கேட்டு எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்தார். அப்படி என் பாட்டை கேட்டு அவர்கள் பத்து பேரிடம் பேசுவார்கள். அப்படிதான் எனக்கு பட வாய்ப்புகள் வருகிறது. நிறைய மக்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும் தான் என்னுடைய வேலை.