தமிழ் சினிமாவை உலகம் போற்றும் அளவிற்கு கொண்டு சென்றவராக கருதப்படுபவர் இளையராஜா. இவரது இசை ஞானத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இவருக்கு இசைஞானி என்ற பட்டத்தை சூட்டினார். அன்று முதல் இன்று வரை இசைஞானி இளையராஜா என்றே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். 

இந்த நிலையில் இளையராஜா தனது பெயர் குறித்தும், அந்த பட்டம் குறித்தும் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

இசைஞானி பட்டத்தின் பின்னணி என்ன?

எனக்கு அப்பாதான் ஞானதேசிகன் என்ற பெயரை வைத்தார். என்னுடைய ஜாதகத்தை பார்த்து அப்படி பெயர் வைத்தார். ஜாதகம் பார்த்துவிட்டு வீட்டில் இவர்தான் பெரிய ஆளாக வருவார் என்று சொல்லி ஞானதேசிகன்னு வைத்தார். நாளடைவில் கலைஞருக்கு எப்படித் தெரிந்ததுனு தெரியல.

அவர் இசைஞானினு பட்டம் கொடுத்தாரு. இசைஞானி அப்படிங்குறது 63 நாயன்மார்களில் சுந்தரரோட அம்மா பெயர். 60வது நாயன்மார் சுந்தரர். அவங்க அப்பா சடையனார், அம்மா இசைஞானியார்.  அந்த இசைஞானிங்குற பெயர்தான் வச்சாரு. நான் சொன்னேன் சுந்தரரோட அம்மா பெயரு இசைஞானினு சொன்னேன். அதுக்கு கலைஞர் தெரிஞ்சுதான் வச்சேன்னு சொன்னாரு.

இவ்வாறு இளையராஜா தெரிவித்தார். 

1000 படங்களுக்கு இசையமைத்தவர்

அன்னக்கிளி படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  காரைக்காலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கருணாநிதி இளையராஜாவிற்கு இந்த பட்டத்தை வழங்கினார். இளையராஜாவிற்கு மேஸ்ட்ரா, இசை மேதை என்று பல பட்டங்கள் இருந்தாலும் அவருக்கு இசைஞானி என்ற பட்டமே மிகவும் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இளையராஜா அனைத்து விதமான உணர்வுகளுக்கும் தன்னுடைய இசையால் பாடல்களை உருவாக்கியுள்ளார். 

சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், கார்த்திக், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், விக்ரம் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 

சுந்தரரின் தாயாரான இசைஞானியார் தீவிர  சிவ பக்தை. சிறுவயது முதலே தீவிர சிவ பக்தையான இவருக்கு சிவ பக்தரான சடையனாருக்கு மணம் முடிக்கப்பட்டது. இவர்களது மகனான சுந்தரனாரும் தீவிர சிவ பக்தராகவே திகழ்ந்தார். சமயக்குரவர்கள் நான்கு பேரில் மிகவும் முக்கியமானவர் சுந்தரர்.