இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இமான், “ எனது நலம் விரும்பிகள், தீவிரமான இசை ரசிகர்கள் என்னுடன் எப்போதும் நின்றிருக்கிறீர்கள். அதற்கு நான் என்றுமே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்கை வெவ்வேறு பாதைகளை கொண்டது. மோனிகா ரிச்சார்டும் நானும் பரஸ்பரம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு எங்களின் திருமண உறவை முடித்து கொண்டு விட்டோம். நாங்கள் கணவன் மனைவி இல்லை.
ஆதலால் நலம் விரும்பிகள், இசை ரசிகர்கள், ஊடகம் ஆகியோர் எங்களுக்கான பிரைவசியை தந்து நாங்கள் இதனை கடந்து தொடர்ந்து பயணிக்க உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான டி.இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட்டை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இமான் இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சிறு வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட டி.இமான் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் திரையுலத்திற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் இமான் பணிபுரிந்திருந்தாலும், அவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம் அமைந்தது. அதனைத் தொடர்ந்து கும்கி, கயல் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இமான் விஜய் நடித்த ஜில்லா படத்திற்கு இசையமைத்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இமான் அஜித் நடித்த விசுவாசம் படத்திற்கு இசையமைத்தார். இந்தப்படத்தில் இடம் பெற்ற கண்ணானே கண்ணே பாடலுக்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திற்கும் இமான் இசையமைத்திருந்தார்.