இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. 

Continues below advertisement

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர். 

Continues below advertisement

இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன்,  பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி, கலை இயக்குநர்கள் வைரபாலன், ஜே.கே, மணி ராஜ், நடிகர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆட்டோகிராப் பற்றி பரத்வாஜ்

இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசுகையில், ''நான் முப்பது வருடங்களாக இசைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், 'ஆட்டோகிராப்' படத்திற்கு இசை அமைத்த அனுபவம்  மறக்க முடியாதது. பாடல் வரிகளுக்கும், உணர்வுகளுக்கும் இசையில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அமைந்தன. இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் சேரன். என்னுடைய இசையில் வெளியான பாடல்களின் ஹிட் லிஸ்டில் 'ஆட்டோகிராப்' பட பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இதற்காக இந்த தருணத்தில் சேரனுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டோகிராப்' படம் ரீ ரிலீஸ் என்றவுடன், அதில் 'ஞாபகம் வருதே...' என்ற என்னுடைய குரலை கேட்டவுடன் எனக்கு பழைய நினைவுகள் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன. 'ஞாபகம் வருதே...' பாடலை சேரன் தான் எழுதினார். முதன்முதலாக நடைபெற்ற நிகழ்வுகளை பட்டியலிட்டு, அவற்றை அழகாக கோர்த்து, பாடலாக்கினார். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.