ஏ.ஆர் ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உடனான 29 ஆண்டுகால திருமண உறவை முடித்துக் கொள்ளவிருப்பதாக சாய்ரா பானு கடந்த சில நாட்கள் முன்பு அறிவித்திருந்தார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட கணிசமான மன உளைச்சலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு இருந்தபோதிலும், பிரிவது என தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். பதட்டங்கள் மற்றும் சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா வலியுறுத்தினார்.
ரஹ்மான் மீது அவதூறுகள்
ரஹ்மான் தனது விவாகரத்தை அறிவித்த அதே நாளில் ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றிய மோகினி என்கிற பெண்ணும் தனது கணவருடனான விவாகரத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரஹ்மான் மற்றும் மோகினியை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பு வகையில் செய்திகளை வெளியிடத் தொடங்கின.
எச்சரிக்கை விடுத்த ரஹ்மான்
ரஹ்மான் பற்றிய அவதூறு பரப்பும் விதமான செய்திகளை அடுத்த 24 மணி நேரத்தில் நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று நவம்பர் 23 ஆம் தேதி ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் வெளியிட்டார்
ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
தற்போது ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ஆடியோ ஒன்றின் மூலம் தனது விவாகரத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். " நான் கொஞ்ச நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். தற்போது மும்பையின் சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் ரஹ்மானிடம் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்ள முடிவெடுத்தேன். இந்த நேரத்தில் ரஹ்மான் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அனைத்து மீடியா தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறேன். ரஹ்மான் ஒரு தங்கமான மனிதர். நான் சிகிச்சை பெற்று வருவதால் ரஹ்மான் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் இந்த முடிவை எடுத்தேன். இந்த மாதிரியான நேரத்தில் நாங்கள் இடைவெளி எடுத்துகொள்ள விரும்புவதாக தான் நாங்கள் அறிவித்தோம். விரைவில் நான் சென்னை திரும்புவேன்" என சாய்ரா பானு இந்த ஆடியோவில் கூறியுள்ளார்