தங்கலான்
இயக்குநர் பா ரஞ்சித் வருகைக்குப் பின் தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் நடந்துள்ளன. பெரும்பாலும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நாயகர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கதைகளே தமிழ் சினிமாவில் அதிகம் வந்துள்ளன. இப்படியான சூழலில் சாதி அடிப்பைடையில் ஒடுக்கப் பட்ட சமூகத்தினரின் வாழ்க்கையையும் அவர்களின் அரசியலையும் வெகுஜன சினிமாவின் வழியாக பேசியர் பா.ரஞ்சித். தனது அரசியலை பிரச்சாரமாக இல்லாமல் சினிமா என்கிற கலை வடிவத்தின் வழியாக ஒரு அனுபவமாக மாற்றுவதை தனது பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறார். வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை பேசுவதன் மூலம் தனது இந்த அரசியலில் புதிய கோணங்களை விவாதத்திற்கு உட்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பா ரஞ்சித் இயக்கியுள்ள வரலாற்றுத் திரைப்படம் தங்கலான்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பார்வதி திருவொத்து , பசுபதி , மாளவிகா மோகணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
பான் இந்திய படமாக உருவாகியுள்ள தங்கலான்
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்களில் ஒன்று தங்கலான் . கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கையும் போராட்ட வரலாறையும் பேசும் தங்கலான் இந்திய சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்ப இருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப் பட்ட தங்கலான் படத்தின் ரிலீஸ் இறுதியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
பின்னணி இசைப் பணிகளை முடித்த ஜி.வி பிரகாஷ்
தங்கலான் படத்தில் அனைவரும் மிக ஆர்வமாக எதிர்பார்த்து வரும் இன்னொரு அம்சம் ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை. முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் போன்ற சரித்திர படங்களில் ஜி.வி யின் பின்னணி இசை ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தங்கலான் படத்தில் அவரது இசை மிகப்பெரும் பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தங்கலான் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்துவிட்டதாக ஜி.வி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தங்கலான் படத்தின் டிரைலரை பார்த்து நிச்சயம் அனைவரும் வியப்படைவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.