விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை முக்தா. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தபோது தனக்கு மிகவும் குறைந்த வயது என்றும், அப்போது தான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும் முக்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாமிரபரணி. குடும்பப் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முக்தா நடித்திருந்தார். பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு இந்தப் படம் நல்ல அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. படத்தில் விஷால், முக்தா இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அந்தக் காலகட்டத்தில் வெளியான வெற்றிப் படங்களில் தாமிரபரணியும் ஒன்றாக அமைந்தது.
ஒன்பதாம் வகுப்பு விடுமுறையில் நடித்தேன்
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தாமிரபரணி படத்தில் நடித்த அனுபவம் குறித்து முக்தா பேசியுள்ளார். அப்போது அந்தப் படத்தில் நடித்த சமயத்தில் தான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும், ஒன்பதாம் வகுப்பு விடுமுறையின்போதுதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இப்போது தன்னைப் பார்க்கும் பலரும் 'உங்களுக்கு வயதே ஆகவில்லை' என்று கூறுவார்கள். ஆனால், அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கே வயது மிகவும் குறைவுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்தாவின் இந்தப் பேட்டி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, தாமிரபரணி படத்தில் அவர் நடித்தபோது ஒன்பதாம் வகுப்பு மாணவியாக இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப் பருவத்தில் இருந்த ஒருவரை எப்படி கதாநாயகியாகத் தேர்வு செய்து விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்கள் என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றார்கள்
மேலும், அப்போது அவருக்கு இருந்த வயது, திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகள் மற்றும் சிறுமிகளைத் திரைப்படங்களில் நடிக்க வைப்பது தொடர்பான சட்ட விதிமுறைகள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த முக்தா இந்தப் படத்தில் நடித்தது சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா அல்லது விதிமீறலா என்ற கேள்வியையும் இணையவாசிகள் முன்வைத்து வருகின்றனர்.
