MRT மியூசிக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீடியோக்களில் பின்னணியில் கேஜிஎஃப் மியூசிக் ஒலித்ததையடுத்து அவருக்கு எதிராக பதிப்புரிமை புகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசிற்கு (பாஜக) எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கத்தில் ‘ பாரத் ஜோடா’ பாத யாத்திரையை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் காஷ்மீரில் நிறைவடைகிறது. இந்த பயணத்தில் ராகுல் காந்தி பல்வேறு மக்களை சந்தித்து கவனம் ஈர்த்து வருகிறார். அவர்களுடன் உரையாடுவது, செல்ஃபி எடுத்துக்கொள்வது, அவர்களின் தொழிலை செய்வது என பல வகையில் அவர்களிடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அதில் சில குறிப்பிட்ட வீடியோக்களில் பின்னணி இசையாக கே.ஜி.எஃப் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசை தரப்பு வழக்கறிஞர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப்புகாரில், “ எங்களுடைய வாடிக்கையாளரான MRT மியூசிக் இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனம். எங்கள் நிறுவனம் படங்களின் பாடல்கள், இசை தொகுப்பு, வீடியோக்கள் போன்றவற்றை உருவாக்குவதோடு, பாடல்களின் உரிமையை வாங்கி பல்வேறு மொழிகளிலும் விநியோகம் செய்து இருக்கிறது. அப்படிப்பட்ட எங்களின் இசையை ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ பாத யாத்திரை தொடர்பான வீடியோக்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரு தேசிய அரசியல் கட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் தனியார், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமைகளை புறக்கணிப்பதை பிரதிபலிக்கும் விதமாக அமைந்து இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மியூசிக் லேபிள் தரப்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கை:
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வீடியோக்களை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.
அதில் ராகுல் காந்தி, எங்கள் அனுமதி/உரிமத்தைப் பெறாமல், அவர்களின் சொந்த அரசியல் நிகழ்ச்சிக்காகவும், விளம்பரத்திற்காகவும் எங்களது இசையை பயன்படுத்தி இருக்கிறார்.
INC (இந்திய தேசிய காங்கிரஸ்) போன்ற ஒரு கட்சி இந்திய குடிமக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதுவே நம் சட்டங்களையும் பதிப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளையும் மீறுகிறது. நாங்கள் பெரும் முதலீடுகள் மூலம் இவற்றைப் பெற்று இருக்கிறோம்.
INC யின் இந்தச் செயல், இந்தியப் பொதுமக்களுக்கு முற்றிலும் தவறான முன்னுதாரணமாக அமைகிறது. இது நமது பதிப்புரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்த கடுமையான மீறல் முழு முயற்சிக்கு நாங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்கிறோம்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.