பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைக6ளைத் தொடர்ந்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று (மே.05) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா - பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது.
இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்.
மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம்.
“மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்.
”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்.