நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் “பத்து தல” படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் சிம்பு நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் நல்ல வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. இதனால் பத்து தல படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த படம் கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ள பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக பத்து தல படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக கடந்த மார்ச் 18 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் கவனம் பெற்றது.
பத்து தல படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ரசிகர்களுக்கு சோகமளிக்கும் விதமாக அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் முதல் காட்சி 8 மணிக்கும், பிற ஊர்களில் 7 மணிக்கும் படம் திரையிடப்பட்டது. இதனால் நள்ளிரவு முதலே தியேட்டர்களில் கட் அவுட்கள், தோரணங்கள், வாண வேடிக்கைகள், மேள தாளங்கள் என களைக் கட்டியது. ரசிகர்கள் சிம்புவின் பாடல்களுக்கு ஆட்டம் போட்டு பத்து தல படத்தை வரவேற்றனர்.
இந்நிலையில் பத்து தல படம் எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பலரும் கலவையான கருத்துகளை தெரிவித்தாலும் சிம்புவின் நடிப்பு சூப்பராக இருப்பதாக சிலாகித்துள்ளனர்.