இந்தியாவில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அவதார்’. கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.
அதேபோல் இந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இப்படம் வசூலில் சாதனைகளை படைத்தது. அதுமட்டுமில்லாமல் உலகளவில் அவதார் படத்தின் முதல் பாகம் தான் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது. இதனிடையே அவதார் படம் 5 பாகங்களாக 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்று படத்தின் 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பலரும் காலை 4 மணிக்கே முதல் காட்சியைப் பார்க்க தியேட்டரில் குவிந்தனர்.
ஏற்கனவே பார்த்த அவதார் படத்தின் முதல் பாகத்தின் கதையை அடிப்படையாக கொண்டது என்று சொல்லப்பட்டாலும் கதைக்களமும், விஷூவல் காட்சிகளும் ட்ரெய்லர் வெளியான போதே பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் சிலவற்றை இங்கு காணலாம்.