கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரம் , விவேகம் ,விஸ்வாசம் , அண்ணாத்தே உள்ளிட்ட படங்களுக்கு முன்னதாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.  வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கங்குவா படம் உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.


ஏன் இந்த கதையை தேர்வு செய்தோம்?


கங்குவா படத்தின் கதையை தேர்வு செய்தது குறித்து பேசிய ஞானவேல் ராஜா “ இயக்குநர் சிவா சூர்யாவுக்கு மொத்தம் நான்கு ஐடியாக்களை சொன்னார். அதில் ஒன்றைத் தவிர மீதம் இருந்த மூன்று கதைகளில் நடிக்கவும் சூர்யா தயாராக இருந்தார். உங்களுக்கு எது ஓக்கே என்று முடிவு செய்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள் என்று அவர் சொல்லிவிட்டார். பின்பு சிவா எனக்கு மீண்டும் ஃபோன் செய்து பேசினார். என்னிடம் இன்னொரு ஐடியா இருக்கும் இதை நான் சூர்யாவிடம் சொன்னால் நிச்சயமாக அவர் மற்ற கதைகளை எல்லாம் விட்டு இதையே படமாக பண்ணலாம் என்றுதான் சொல்வார். ஆனால் நான் உங்களைப் பற்றிதான் யோசிக்கிறேன். இந்தப் படத்தின் பட்ஜெட் நாம் கணக்கிட முடியாதது அதனால் நான் உங்களுக்கு அந்த சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை.






நான் சிவாவிடம் கதை கேட்டேன். எனக்கு கதை ரொமப பிடித்திருந்தது. ஒரு பார்வையாளனாக நான் இந்த மாதிரியான கதையை தான் பார்க்க ஆசைப்படுகிறேன் அதனால் பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டேன்.  ஆனால் இதை நான் சூர்யாவிடம் சொல்வதற்கு முன்பாக என்னை இரண்டு நாள் நன்றாக யோசித்துக்கொள்ள சொன்னார் இயக்குநர் சிவா. இரண்டு நாள் கழித்து நான் சூர்யாவிடம் இந்த கதையை சொன்னேன். அவர் உடனே உற்சாகமாகி விட்டார்.  அப்படிதான் கங்குவா படத்தின் கதையை தேர்வு செய்தோம்’ என்று ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்




மேலும் படிக்க : Watch Video : இது புதுசா இருக்கே! திருமணம் முடிந்து 1 மாதம் முடிந்ததை கொண்டாடும் பிரேம்ஜி..