பல படங்கள், அதில் நடித்துள்ள நடிகர்களை வைத்து அடையாளம் காணப்படும். சில படங்கள் தான், அதில் உள்ள கதாபாத்திரங்களால் அறியப்படும். அப்படி அறியப்பட்ட திரைப்படம் தான், மூடர் கூடம். படத்தின் தலைப்பே சொல்லிவிடும், இது ஒரு முட்டாள்களின் கதை என்று. முட்டாள்கள் என்றால், அவர்களின் செயல்கள் தான், அதற்கான பெயருக்கு காரணம். 


இந்த படத்திலும், வெவ்வேறு ஒற்றுமை கொண்ட சில முட்டாள்கள் இணைந்து செய்யும் செயலும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் மூடர் கூடம். நவீன், சென்ராயன், வெள்ளைச்சாமி, சபேஷ் என நான்கு இளைஞர்கள். சமூகத்தாலும், உறவுகளாலும் இவர்கள் சந்தித்த துன்பங்கள், அவமானங்கள், வேதனை ஆகியவை இவர்களை ஒன்றிணைக்கிறது. 






இவர்களை நவீன் என்கிற இளைஞர் வழிநடத்துகிறார். வெள்ளைச்சாமி என்கிற இளைஞனின் உறவினர், பணம் இருந்தும் அவனுக்கு உதவ மறுக்கிறார். அதே நேரத்தில் அந்த நபர், நிறைய பணத்தை சுருட்டிக் கொண்டு நாடு விட்டு நாடு மாற திட்டமிடுகிறார். அந்த நேரத்தில், தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பதிலடி தர, தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்த வீட்டிற்குள் கொள்ளையடிக்கச் செல்கிறது மூடர் கூடம். அந்த நேரத்தில் தான், அங்கு அவர்களுக்கு பல உண்மைகள் தெரியவருகிறது. 


கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் நடக்கும் காதல், காமெடி, ஆக்ஷன் இவை தான் மூடர் கூடம். படத்தில் குறைந்தபட்சம் சென்ட்ராயன் கதாபாத்திரத்தில் நடித்த சென்ட்ராயனை மட்டும் தான் அப்போது அனைவருக்கும் தெரிந்தது. இயக்குனர் நவீன் உள்ளிட்ட யாரையுமே அப்போது தெரியாது. ஆனால், படம், பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தை பார்த்து விழுந்த விழுந்து சிரித்தவர்கள் ஏராளம். 


ஓவியா, ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் என முகம் தெரிந்தவர்கள் இருந்ததால், இன்னும் படம் கவனிக்கப்பட்டது. ஒருவர் கூட சீரியஸ் கதாபாத்திரம் கிடையாது . வில்லன் முதற்கொண்டு அனைத்து கதாபாத்திரமும் காமெடி கதாபாத்திரமாகவே இருந்தன. இதனால் ப்ரேம் ஃபை ப்ரேம் ரசிக்கவும், சிரிக்கவும் முடிந்தது. 






நவீன் எழுதி இயக்கிய மூடர் கூடம் படத்திற்கு டோனி ஜான் ஒளிப்பதிவும், நடராஜன் சங்கரன் இசையும் அமைத்திருந்தனர். ஒயிட் ஷெடோ நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை பசங்க ப்ரொடக்ஷன் நிறுவனம் வெளியிட்டது. வெளியிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது மூடர் கூடம். 


இன்று இதே நாளில் 9 ஆண்டுகளுக்கு முன், 2013ல் வெளியான மூடர் கூடம், பல உண்மைகளை சிரிப்பு வழியாக சிதற விட்டதை யாரும் மறக்க முடியாது.