நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க வைப்பதாக மும்பை மாடல் அழகியிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் “ஜெயிலர்”
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும், பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும், இணைந்துள்ள படம் “ஜெயிலர்”. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய ஜெயிலர் படப்பிடிப்பு 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியிடம் பண மோசடி நடைபெற்றுள்ளது. மும்பையின் வெர்சோவா பகுதியைச் சேர்ந்த சன்னா சுரி என்ற 29 வயது பெண் தான் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
இவரை கடந்தாண்டு ஜூலை மாதம் பியூஷ் ஜெயின் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். பிளாக்கிளாத் ஈவன்ட்ஸ் என்ற சமூக வலைத்தள கணக்கில் இருந்து சன்னாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட அவர், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஆட்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் படத்தில் வரும் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் மாடல் அழகியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சன்னா சுரி தனது தாயார் வன்னிதாவிடம் பட வாய்ப்பு தொடர்பாக பேசியதோடு மட்டுமல்லாமல், பியூஷ் ஜெயிலை தொடர்பு கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளார். உடனே சன்னாவை போலீஸ் உடையில் நடிக்க வைத்து வீடியோ அனுப்பும்படி தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் ஜெயிலர் படத்தில் நடிக்க சன்னா தேர்வாகி விட்டதாக வன்னிதாவிடம் பியூஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியுடன் இருப்பது போன்ற போஸ்டரையும் வடிவமைத்து அனுப்பியுள்ளார். இதனை உண்மை என நம்பிய சன்னா சுரி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அந்த போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த சில நாட்களில் சமீர் ஜெயின் என்பவர் சன்னா சுரியை தொடர்பு கொண்டு தான் ஒரு காஸ்டிங் இயக்குநர் என்றும், இன்னும் 3 பிரபல நடிகர்களின் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக பேசியுள்ளார். மேலும் தான் பியூஷ் ஜெயினுக்கு தெரிந்தவர் எனவும் கூறியுள்ளார். 2 பேரும் சேர்ந்து ரஜினிகாந்துடன் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமான டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி ரூ.9 லட்சத்தைப் பெற்றுள்ளனர்.
வெளிவந்த மோசடி
இந்நிலையில் சன்னா பதிவிட்ட ஜெயிலர் போஸ்டரை பார்த்து கடந்த நவம்பர் மாதம் ஜெயிலர் படத்தின் உதவி இயக்குநர் ஒருவர் அவரின் தாய் வன்னிதாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நீங்கள் பதிவிட்டது போலி போஸ்டர் என்றும், ஜெயிலர் படத்தில் நடிக்க உங்கள் மகளை தேர்வு செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். பியூஷ் ஜெயின், சமீர் ஜெயின் ஆகிய 2 பேருக்கும் படக்குழுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சன்னா சுரி, வன்னிதா இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
உடனடியாக இதுகுறித்து மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்