ஏ.ஆர் ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு தங்கள் விவாகரத்து குறித்த அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார்கள். ரஹ்மானின் விவாகரத்து செய்தி வெளியான அதே நாளில் ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றிய மோகினி தே தனது கணவருடனான விவாகரத்தை அறிவித்தார். இதனால் ரஹ்மான் மற்றும் மோகினியை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு தவறான செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ரஹ்மான் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பாக அவதூறு பரப்பும் விதமாக செய்தி வெளியிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. மேலும் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் தங்கள் விவாகரத்திற்கான காரணத்தை தெரிவித்தார்.
தனக்கு உடல் நிலை சரியில்லாததால் தற்போது தான் மும்பையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இந்த சூழலில் தனகு கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்திருந்தார். ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர் என்றும் அவரைப் பற்றிய தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் தமிழ் மீடியாக்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். சாய்ரா பானுவைத் தொடர்ந்து தற்போது மோகினி தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
ரஹ்மான் எனது தந்தை மாதிரி
" நான் என்னுடைய கான்சர்டில் பிஸியாக இருந்தேன். மூச்சுவிடக்குட இப்போதான் நேரம் கிடைத்திருக்கிறது. எனக்கு தந்தை ஸ்தானத்தில் நிறைய ரோல் மாடல்கள் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையை வழிநடத்தியதில் இவர்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அப்படியான ஒருவர் தான் ஏ.ஆர். ரஹ்மான் என்னுடைய தந்தை மாதிரி. என் தந்தையைவிட அவருக்கு வயது கம்மிதான். அவருக்கு என் வயதில் ஒரு மகளும் இருக்கிறார். எங்கள் இருவருக்கும் ஒருத்தர் மீது ஒருத்தருக்கு அளவுகடந்த அன்பும் மரியாதையும் இருக்கிறது. நான் ரஹ்மானின் இசைக்குழுவில் பாஸிஸ்டாக எட்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். இப்போது எனக்கு தனியாக ஒரு இசைக்குழு இருக்கிறது. தயவு செய்து கொஞ்சம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். எங்கள் தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள். இது ரொம்ப வலி நிறைந்த ஒரு தருணம் இந்த தருணத்தை புரிந்துகொண்டு கொஞ்சம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்" என இந்த வீடியோவில் மோகினி பேசியுள்ளார்