வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கர்ல்


தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக திகழ்பவர் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில் இவரது விடுதலை 2 திரைப்படம் வெளியானது. வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வர்ஷா பரத். தற்போது பேட் கர்ல் படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து இந்த படத்தை வழங்கியுள்ளார்கள். அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்  சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளார்கள். பேட் கர்ல் படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


ஒரு பெண்ணின் பள்ளி பருவம் முதல் அவளது இளம் பருவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் பேட் கர்ட். மிக சாதாரணமாக தனது வாழ்க்கையை வாழ நினைக்கும் ஒரு பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை இப்படம் பேசும் என எதிர்பார்க்கலாம். இந்த டிசர் ஒரு தரப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் இன்னொரு தரப்பினர் விமர்சனங்களையும் கூறியுள்ளார்கள். எப்போதும் போல் ஆதிக்க சமூதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை வைத்து புரட்சி பேசுகிறார்கள் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. 


 


வெற்றிமாறனை விமர்சித்த மோகன் ஜி


"ஒரு பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை படமாக்குவது இந்த கூட்டத்திற்கு எப்போதும் புதிதான ஒன்றாக தெரிகிறது. வெற்றிமாறன் , அனுராக் கஷ்யப் போன்றவர்களிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும். பிராமண பெற்றோர்களை விமர்சிப்பது ட்ரெட்ன்ட் இல்லை அது ரொம்ப பழசு. உங்கள் சாதியைச் சேர்ந்த பெண்களை வைத்து இப்படி படம் எடுத்து அதை முதலில் உங்கள் குடும்பத்திடம் காட்டுங்கள் " என மோகன் ஜி விமர்சித்துள்ளார்.